Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

கலிங்கத்துப் பரணி
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை



 


1. கலிங்கத்துப் பரணி
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. கலிங்கத்துப் பரணி

 


கலிங்கத்துப் பரணி

 

ந.சி. கந்தையா

 

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)


தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.

‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’

என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.

அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.

இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.

பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.

தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.

திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-

திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.

பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.

“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”

வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.

அன்பன்

கோ. தேவராசன்

அகம் நுதலுதல்


உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.

உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.

தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.

எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.

இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.

எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.

வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.

உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.

இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.

சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.

அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.

உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.

நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.

அன்பன்

புலவர் த. ஆறுமுகன்

நூலறிமுகவுரை


திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.

இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.

திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.

இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.

ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:

சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்

58, 37ஆவது ஒழுங்கை,

கார்த்திகேசு சிவத்தம்பி

வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்

கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.

கருவிநூல் தந்த ந.சி. கந்தையா


தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.

தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.

தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.

மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.

நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.

தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

பேரா. கு. அரசேந்திரன்

பதிப்புரை


வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.

இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.

ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.

தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.

தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.

தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.

நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.

வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.

ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?

தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.

மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.

இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிப்பகத்தார்

கலிங்கத்துப் பரணி


முகவுரை
பண்டைக் காலத்தே தமிழ் நாடு, சேர சோழ பாண்டியர் முதலிய முடியுடை மூவேந்தராலும், குறுநில மன்னராலும் புரக்கப்பட்டதென்பது எவரும் அறிந்ததே. அம் மன்னர்கள் தம்மைப் பாடிவரும் புலவரின் தரங் களை யறிந்து பரிசில் வழங்கி அவர் வறுமை களைந்தனர். இவ்வாறு பாடிய பாடல்களே பத்துப்பாட்டு, புறநானூறு, பதிற்றுப்பத்து முதலிய சங்கச் செய் யுட்களாகும். தமிழ் நாட்டின் பல்லிடங்களிலிருந்து, பாடி வருவோரையன்றி அரசராற் கௌரவிக்கப்பட்ட அரண்மனைப் புலவர்களும் விளங்கினர். அரசன் பகைவரைவென்று எடுக்கும் விழா போன்ற பெருநாட்களில் புலவர்கள் தம்மைப் புரக்கின்ற வேந்தனின் வீரம், கொடை, புகழ் ஆகிய வற்றை இனிய செய்யுள் நடையில் அமைத்து அவன் முன்னிலையிற் பாடுதல் மரபு. கலிங்கத்துப் பரணியும் இவ்வாறு பாடப்பட்ட தொன்றேயாம்.

இந்நூலின் பாட்டுடைத் தலைவனாகிய விசயதரனது அரண்மனைப் புலவராய் விளங்கியவர் சயங்கொண்டார். விசயதரன் ஆணையைத் தலைக்கொண்டு கருணாகரத் தொண்டைமானின் தலைமையிற் சென்ற சோழப்படை கலிங்கரை முறியடித்து வாகைசூடி மீண்டது. இவ்வெற்றி காரணமாகக் கங்கைகொண்ட சோழபுரத்துப் பரணி விழா பெருஞ் சிறப் போடு கொண்டாடப் பெற்றது. தன்னைப் புரக்கும் வேந்தனின் புகழை என்றும் அழியாது நாட்ட விழைந்த சயங்கொண்டார் இவ்விழாவினை ஏற்ற தருணமாகக் கொண்டு, கலிங்கத்துப் பரணியென்னும் நூலை யாவரும் மெச்சும் முறையில் இயற்றி, விசயதரன் முன்னிலையிற் பாடியருளினார். இப்புலவர் காலத்திற்குப் பின் விளங்கிய புலவர்கள் பல பரணிகள் பாடின ராயினும் அவை யெல்லாம் கலிங்கத்துப் பரணிக்குத் தோற்றன. ஆகவே, பிற்காலப் புலவரொருவர் “பரணிக்கோர் சயங் கொண்டார்” எனப் புகழ்ந்து கூறினர்.

சங்கச் செய்யுட்கள் முதலிய பண்டை நூல்கள் இக்காலத்தவர்க்கு எளிதிற் பொருள் விளங்கக்கூடாதனவாயிருக்கின்றன. அக்காலப் புலவர்கள் அவ்வளவு கடின பதங்களைப் புகுத்தி ஏன் நூல் செய்தார்கள்? என்று பலர் வினாவுதல் கூடும். அப்புலவர்கள் அக்கால மக்கள் எளிதில் விளங்கக்கூடிய சொற்களை அமைத்தே செய்யுட்களைப் பாடினர். அக் காலச் சொற்கள் வழக்கு வீழ்ந்த பிற்காலத்து அச்செய்யுட்கள் பொருள் விளங்கற் கருமையுடையனவாய்க் காணப்படுகின்றன. சங்க நூல்களை விடக் கலிங்கத்துப்பரணி காலத்தால் மிகப் பிற்பட்டதாதலின் அதிற் பயின் றுள்ள சொற்கள் பெரும்பாலன எளிதிற் பொருள் விளங்கக்கூடியனவா யிருக்கின்றன. நூல்களிற் பயின்றுள்ள சொற்களையும் நடையையும் கொண்டு ஒருவாறு அவற்றின் காலத்தைக் கூறுதலும் அமையும்.

இந்நூலின் செய்யுட் பதிப்புப் பல பிழைகள் விரவப் பெற்றதாதலின், மூல பாடத்தின் சில விடங்களுக்குத் திருத்தமான பொருள் காண்பதில் இடையூறு ஏற்படுவதாயிற்று. மகா வித்துவான், திரு. மு. ராகவ ஐயங்கார் அவர்களின் கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி அவ்விடையூறு களைதற்குப் பேருதவி புரிந்தது.

கடைதிறப்பென்னும் பகுதி, தங் கணவர் வரத் தாமதித்தமையின் ஊடித் தாழடைத்திருந்த மகளிரை விளித்துப் புலவர் பாடுவதாக அமைந்தது என்பது மூலத்தைப் பதிப்பித்த திரு. கோபால ஐயரது கருத்து. தந்தலைவர் வராத விடத்து மகளிர் கவலையுற்றிருத்தலே மரபு என ஐயங்காரவர்கள் கூறுவது மிகப் பொருத்தமானதே. கணவர் வரத் தாழ்ந் தமைக்கிரங்கி அவர் மகளிர் வருந்தி இருக்கும் இயல்பு புறப்பொருள் வெண்பாமாலையில் நன்கு கூறப்பட்டுள்ளது.

இக்காலத்தை வசனகால மென்பர். இக்காலம் மாணவரும் பிறரும் எல்லாப் பொருள்களையும் வசன நூல்கள் வாயிலாகவே கற்றறியவிரும்பு கின்றனர். அதனால் செய்யுள் நடையிலுள்ள நூல்களைப் பயில்வாரின் தொகை நாள் வீதம் அருகி வருகின்றது. செய்யுள் நூல்கள் தெள்ளிய வசன நடையில் எழுதப்படுதலால் அவற்றைக் கற்கும் மாணவர்க்கு மூலத்தைப் படிக்க ஆர்வமுண்டாகும்
.
இந்நோக்கத்துடனேயே கலிங்கத்துப்பரணி, வசன நடையில் எழுதப் படலாயிற்று; எழுதுமிடத்து மூலத்தின் கருத்து விடுபட்டிலது. இந்நூல் மாணவர்க்கும் பிறர்க்கும் ஓர் விருந்துபோன்றது.

பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிப்போரின் சில குறைகளையும் நாம் கூறாமலிருக்க முடியவில்லை. விளக்கவேண்டிய கடின பதங்களையும் சொற்றொடர்களையும் விளக்காது போகும் அவர் மௌனம் கவற்சிக் குரியதே.

1“கள்ளி பாலறப் பொரிந்த தாவரையும்
வள்ளியோர் கொடைமறந்திடிற் கயவரோ வளர்ப்பார்”

ந. சி. கந்தையா.

தமிழ் நிலையம்

நவாலியூர்,

4. 1938

சயங்கொண்டார்
ஒருவன திரண்டியாக்கை யூன்பயி னரம்பின் யாத்த
வுருவமும் புகழு மென்றாங் கவற்றினூழ் காத்துவந்து
மருவிய வுருவமிங்கே மறைந்து போமற்ற யாக்கை
திருவமர்ந் துலகமேத்தச் சிறந்து பின்னிற்கு மன்றே. (சூளாமணி)

என்றாங்கு புகழ் உடம்புபெற்று நம்மெதிரே உலவுகின்ற பெரும் புலவர் களுள் சயங்கொண்டாரும் ஒருவர். சயங்கொண்டாரென்பது இவர் இயற் பெயரன்று; காரணப் பெயரே.

“இவர் விசயதரன் வாயில் வித்துவான்கள் தந் தலைவர். தென் னாட்டுப் புலவர் போந்து புரிந்த வாதப் போரின்கண் நந்தம் புலவர் பிரான் வென்றமை காரணமாகச் சயங்கொண்டாரெனப் பட்டப் பெயர் பெற்றுத் திகழா நின்றுழி விசயதரன் வடகலிங்கரைத் தொலைத்து வாகையந்தார் மிலைந்து, சயங்கொண்டானை நோக்கி, ‘யானுஞ் சயங்கொண்டானா யினேன்’ என்றனன். எனவே சயங்கொண்டான் மீது பரணி புனைவே னென்று நம் பாவலர் கோமான் கூறிச்சென்று சின்னாட்களில் நூலினை யியற்றி அரசனது அவைக்களத்தே அரங்கேற்றக் கருதி அவ்வாறே செய்யா நின்றுழி பரணி நூற் பாடல்களைப் பரிவுகூர்ந்து செவி மடுத்து வீற்றிருந்த வேந்தன் ஒவ்வொரு தாழிசைகளி னிறுதியிலும் ஒவ்வொரு பொற்றேங்காய் பரிசிலாக உருட்டி, தனக்கு அவ்வித்துவான் மீதும் அவனது நூலின்மீதும் உள்ள அன்பினையும் ஆர்வத்தினையும் வெளிப்படுத்தினானென்று கூறுப.1” இவரது பிறப்பு வளர்ப்பு குலம் கோத்திரம் ஆதியன அறியாத வற்றுட் சில. இவர் பிறந்த ஊர் தீபங்குடி என்று தமிழ் நாவலர் சரிதையால் விளங்குகின்றது. இவரது சமயம் சைவமே என்பது கடவுள் வாழ்த்துச் செய்யுட்களால் இனிது புலனாம். கொடு வைணவமும் கொடுஞ் சைவமும் இவர் காலத்தில் தோன்றிற்றில போலும்.

விநாயகக்கடவுள் தனது கொம்பை முறித்து எழுத்தாணியாகக் கையிற் பிடித்து மேருமலையின் புறத்தே, பாரதக் கதையை வியாசர் சொல்லக் கேட்டெழுதினார் என்னும் கதையை முதன்முதல் எழுதியவர் இவரே. இவரது வாக்குகளை அடியொற்றியே கடவுள் முனிவர் “தவளமா மருப் பொன்றொடித் தொருகரத்திற் றரித்துயர் கிரிப் புறத்தெழுதும் கவளமா களிற்றின்றிருமுகம் படைத்த கடவுளை நினைத்துகைதொழுவாம்”1 எனப் பாடினர்போலும். சயங்கொண்டார் காலத்து, முன்னதாக விநாயகக் கடவுளுக்குக்காப்புச் சொல்லி நூல் தொடங்கும் மரபில்லை என்று விளங்கு கின்றது. சயங்கொண்டாரின் பரணி பாடுந்திறமையை உணர்த்தும் செய்யுள்:-

2“வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்
சயங்கொண்டான் விருத்த மென்னு
மொண்பாவி லுயர் கம்பன் கோவையுலா
வந்தாதிக் கொட்டக் கூத்தன்
கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்
வசைபாடக் காளமேகம்
பண்பாய பகர்சந்தம் படிக்காச
லாதொருவற் பகரொணாதே”


கருணாகரத் தொண்டைமான்
மத்திய காலத்துச் சோழர் நாளிலே, பல்லவ வேந்தர் தம் பெருவலி குன்றி, அச்சோழரின்கீழ் அமைச்சராகவும், படைத் தலைவராகவும், அதிகாரிகளாகவும் அமர்ந்ததோடு தொண்டை நாட்டில் மட்டுமன்றிச் சோணாட்டினும் பிற விடங்களிலும் சிறியவும் பெரியவுமான ஊர்கட்குத் தலைவர்களாகவும் இருந்தவர்களுள் கருணாகரனும் ஒருவன். இவன் முன்னோர் தொண்டை நாடாண்டமை பற்றி, அவர் நாடு ஊர்களையும் புலவர்கள் இவனுக்கு உரியவாகச் சிறப்பிப்பாராயினும், இவன் உண்மையிற் சோணாட்டவனே. இவனூராகிய வண்டை என்பதும் இதுவரையிற் கருதப்பட்டதுபோல், தொண்டை நாட்டிலுள்ள வண்டலூரன்றிச் சோழ நாட்டிலுள்ளதோர் ஊரேயாகும்.1

கருணாகரன், விசயதரனது முதன் மந்திரியும், அவனது சக்கரமாகப் படைத்தலைமை பூண்டு கலிங்கத்தே சென்று போர் நிகழ்த்திக் கலிங்கரை முறியடித்து, கலிங்க வேந்தனையும் பிடித்துக்கொண்டு யானை குதிரை குவிதனம் முதலியவற்றோடு சோழ நாடு திரும்பியவனுமாவன். இவன் பிரமாவமிசத்தவன் என்பது.

“மறைமொ ழிந்தபதி மரபின் வந்தகுல
திலகன் வண்டைநக ராசனே” (328)

என்னு மடிகளால் அறியக்கிடக்கின்றது.

“அலகில் செருமுதிர் போதில் வண்டைய
ரரச னரசர் கணாதன் மந்திரி
உலகு புகழ்கரு ணாக ரன்தன
தொருகை இருபணை வேழமுந்தவே.” (430)

“காட்டிய வேழ வணிவாரிக்
கலிங்கப் பரணிநங் காவலனைச்
சூட்டிய தோன்றலைப் பாடீரே
தொண்டையர் வேந்தனைப் பாடீரே.” (522)

“வண்டை வளம்பதி பாடீரே………
பல்லவர் தோன்றலைப் பாடீரே.” (521)
“வண்டைமன், தொண்டைமான் முதன்மந்திரி பாரகர்
சூழ்ந்துதன் கழல்சூடி யிருக்கவே.” (314)

இத்தாழிசைகள் கருணாகரன் வரலாறுகளைத் துலக்குகின்றன.

“பண்டையோர் நாளையிலேரேழ் கலிங்கப் பரணிகொண்டு
செண்டையும் மேருவிற் றீட்டுவித்தோன் கழற் செம்பியன் சேய்
தொண்டை நன்னாடு புரக்கின்ற கோனந்தி தோன்ற லெங்கள்
வண்டையர் கோனங் கருணாகரன் றொண்டை மண்டலமே”

என்பது தொண்டை மண்டல சதகம்.

பரணி
பரணி என்பது, போரிடை ஆயிரங்களிற்றியானை படஎறிந்து வென்ற தலைவனைப் பாடும் ஓர் பிரபந்தம். இது கடைதிறப்பு, காடுபாடுதல், காளிகோயில் பாடுதல், பேய்களைப் பாடுதல், தேவியைப் பாடுதல், பேய் களுக்குக் காளிகூறுதல் முதலிய உறுப்புகளைப் புணர்த்துக் கூறுமுகத் தால் பாட்டுடைத்தலைவன் கீர்த்தியும் சிறப்பும் தோன்றக் கூறுதல்.

“ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி” அது:-
“கடவுள் வாழ்த்துக் கடைதிறப் புரைத்தல்
கடும்பாலை கூறல் கொடுங்காளி கோட்டம்
கடிகண முரைத்தல் காளிக்கது சொலல்
அடுபேய்க் கவள்சொல லதனாற் றலைவன்
வண் புகழுரைத்த லெண்புறத் திணையுற
வீட்ட லடுகளம் வேட்ட லிவைமே
லளவடி முதலா வடி யிரண்டாக
உளமகிழ் பரணி உரைக்கப் படுமே.” (இல. விள.)

“பரணியாவது:- நாடு கெழு செல்விக்குப் பரணிநாட் கூழும் துணங் கையும் கொடுத்து வழிபடுவதோர் வழக்குப் பற்றியது; அது பாட்டுடைத் தலைவனைப் பெய்து கூறலிற் புறத்திணை பலவும் விரவிற்று.” (தொல். செய். 148 நச்.)

விசயதரன்
கி. பி. 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முதலாவது இராசேந்திரன் மிகவும் பராக்கிரமசாலியாய் விளங்கினான். இவனுக்குக் கங்கைகொண்ட சோழன் என்பது மறுபெயர். இவனது இராசதானியாக விளங்கியது கங்கை கொண்ட சோழபுரம். இவனுக்கு இராசாதித்தன், விசய ராசேந்திரன், வீர ராசேந்திரன் என்ற மூன்று புதல்வர்களும் மங்காதேவி என்னும் ஓர் புதல்வியும் இருந்தனர். மங்காதேவியை வேங்கை நாட்டரசனான சளுக்கிய இராச இராசன் மணந்தான். சோழர் சூரிய வமிசத்தினர். சளுக்கியர் சந்திர வமிசத்தினர். சளுக்கிய இராச இராசனுக்கு மங்காதேவியின் வயிற்றிற் பிறந்தவன் விசயதரன். சோழ வமிசம் நேரான சந்ததி இல்லாமல் இருந் தமையால் கங்கை கொண்ட சோழன் மனைவியாகிய பாட்டி அவனைச் சுவீகார புத்திரனாக எடுத்து வளர்த்தாள். அக்காலத்து ஆட்சி புரிந்தவன் இவனது தாய் மாமனாகிய வீரராசேந்திரன். விசயதரன் உரிய பிராயம் அடைந்தபோது இளவரசுப் பட்டங் கட்டப்பெற்றான். விசயதரன் வடக்கே சக்கர கோட்டத்துக்குப் படையெடுத்துச் சென்ற காலத்து வீரராசேந்திரன் பரலோகம் அடைந்தான். சோழசிம்மாசனத்துரிமைபற்றி அங்கிருந்த அரச வமிசத்தினருள் விவாத முண்டாகியதால் நாடெங்கும் கலக்கமும் குழப்பமும் விளைந்தன. தன் மாமன் இறந்தமையையும் நாடு அரசனில்லாமற் குழப்ப மடைந்திருப்பதையும் கேள்வியுற்ற விசயதரன் உடனே அங்கிருந்து திரும்பிச் சோணாடடைந்து கலகத்தை அடக்கி முடிசூடி ஆட்சிபுரிந்தான். இவனது ஆட்சிக்காலம் கி. பி. 1070 முதல் 1118 வரை. இவனுக்கு அபயன், சயதுங்கன், முதலாம் குலோத்துங்கன் முதலிய மறு பெயர்களும் வழங்கும்.

இவனது முதல்மந்திரியாய் விளங்கியவர் கருணாகரத் தொண்டை மான். கருணாகரத் தொண்டைமானோடு கலிங்கப்போருக்கு உபசேனாதி பதிகளாகச் சென்றோர் பல்லவரசன், வாணகோவரையன், முடிகொண்ட சோழன், காலிங்கராயர் முதலியோர். இவன் முடிசூடி 25வது ஆண்டில் அப்போர் நேர்ந்தது. இவ் வேந்தன் சைவ மதத்தினனென்பது.

“தென்றிசையினின்று வடதிக்கின்முகம் வைத்தருளி
முக்கணுடை வெள்ளி மலையோன்
மன்றிடை யாடியருள் பொண்டுவிடை கொண்டதிகை
மாநகருள் விட்டருளியே”

என்னும் தாழிசையால் இனிது விளங்கும். இவன் ஏழிசை வல்லபி என்னும் காதற்றேவியும், தியாகவல்லி என்னும் பட்டத்துத் தேவியுமாகியஇரு மனைவிய ருடையனாகவிருந்தான்.

நூல்நயம்
சயங்கொண்டாரின் பரணிப் பாடல்கள் விலைமதித்தற்கரிய மணிகள் போன்றன. இப்புலவரைச் சொல்லின் மன்னர் என்று கூறலாம். சொற்பஞ்ச மென்பதை இவர் அறியார். சொற்களுக்காக எங்காவது இவர் இடர்ப்பட்டா ரெனத் தெரியவில்லை. செய்யுள் ஒவ்வொன்றும் ஆற்றோட்டம்போலத் தங்குதடையின்றிச் செல்கின்றது. பாடுவதில் இணையற்றவ ராதலினாலேயே இவர் கவிச்சக்கரவர்த்தி எனக் கொண்டாடப்பெற்றார். சுருங்கக் கூறுமிடத்து, கலிங்கத்துப்பரணிச் செய்யுட்கள் “தமிழினொழுகு நறுஞ்சுவை” என விள்ளலாம். இப்பாடல்களில் எது சுவையான் மிக்கது எது சுவையாற் றாழ்ந்தது என அறிந்துகொள்ள முடியாதிருப்பது ஒரு சிறப்பு. ஒவ்வொரு பாடலும் சொல்வளம் பொருள்வளம் நிரம்பப்பெற்றது.

இந்நூலைக் கற்போருள்ளத்தில் எவ்வகைக் களைப்பும் தோன்றுவ தில்லை. ஒவ்வோர் பொருளையும் வருணிக்குமிடத்து அளவுகடந்து செல்லாது நிகழ்ச்சிகளை மாற்றி மாற்றி அமைத்திருத்தலோடு, நகை, வீரம், சோகம் முதலிய சுவைகள் இடையிடையே விரவ உள்ளம் கொள்ளும் முறையில் அமைத்துப் பாடியிருத்தல் மிக வியக்கத்தக்கது. தாம் வருணிக்கும் ஒவ்வொன்றையும் உச்சப்படியில் வைத்து இப் புலவர் வருணித்திருத்தல் கருத்தில் கொண்டு நோக்கத்தக்கது. விசயதரனது கீர்த்தியைப் பற்றிப் புலவர் வருணிக்கின்ற வருணிப்பில் நமக்கே பொறாமை உண்டா கின்றது.

புலவர் பாடியுள்ள ஒவ்வொருபகுதியின் காட்சிகளும் நம்மனக் கண்ணெதிரே நனவுபோல் தோன்றுகின்றன.

பாலைவனத்தின் கொடுமையைப் புலவர் கூறுமிடத்து நாமே அதன் வெம்மையை உணர்கின்றோம்.

“காடிதனைக் கடத்து மெனக் கருமுகிலும்
வெண்மதியும் கடக்கவப்பா
லோடியிளைத் துடல் வியர்த்த வியர்ப்பன்றோ
வுகுபுனலும் பனியுமம்மா” (கலி. பர. 73)

என்னும் தாழிசை எவ்வளவு நயமாகக் கூறப்பட்டுள்ளது. பேய்களைப் பாடுமிடத்து,

“கொட்டு மேழியுங் கோத்தன பல்லின
கோம்பி பாம்பிடைக் கோத்தணி தாலிய
தட்டி வானைத் தகர்க்குந் தலையின
தாழ்ந்து மார்பிடைத் தட்டு முதட்டின” (128)

என்பன போன்று கூறப்படும் செய்யுட்கள் மகிழ்தற்குரியன.

சண்டையைக் கூறும் பகுதியைப் படிக்கில் அதனை நாம் நேரிற் காணவேண்டியதில்லை. வீரரின் உற்சாகம் முதலியன வீரச்சுவை தோன்றக் கூறப்பட்டுள்ளன. அவற்றைப் படிக்கும் நமக்கே நம்மை அறியாது வீரம் எழுகின்றது.
கலிங்கர் சிதறி ஓடியதைப்பற்றிக் கூறுமிடத்தும், பேய்கள் கூழ் உண்பதைக் கூறுமிடத்தும் நகைச்சுவை பொங்கி வழிகின்றது.

பிராமணப்பேய் “பகவதி! பிட்சாந் தேகி” என்று பிச்சை கேட்டல், பாக்குச் செருக்கிய பேய்கள் பூதத்தின் தலைமயிரை மணத்தல், சமணப் பேய்கள் ஒருபொழுதுண்ணல், புத்தப் பேய்கள் தோள் மறையப் போர்வை போர்த்திருத்தல் கஞ்சி குடித்தல், ஊமைப்பேய் பதலை நிறைந்த கூழைக் கையாற் காட்டி வயிற்றைத் தடவிப் பசியை அறிவித்தல் முதலியன சில உலகவழக்கினை உணர்த்துவன.

கலிங்கத்துப்பரணி வசனம்
கடவுள் வாழ்த்து
உமாபதி
இந்நில வுலகாகிய பெண்ணை அயன் படைத்தான். திருமால் அவளைக் காத்தளிக்கும் உரிமையுடையன். அத்திருமாலின் அவதார மாகியவனும் தந்தை தாய் என்னும் இரு தூய மரபினுக்கும் உரிமை பூண்டவனுமாகிய அபயன் வாழ்வானாக என்று, திருமால் தாரை வார்க்கப் பிரமா சடங்கியற்ற, உலகில் இல்வாழ்க்கையை நிலை நிறுத்துதற்பொருட்டு மலை அரசன் மகளை மணந்த கடவுளை நினைந்து துதிசெய்வோமாக. (என்று துதிசெய்வோமாக என்று கொண்டு கூட்டுக)

திருமால்
நெடியமாலின் வயிற்றை ஒப்ப அருளுடைய அபயனது ஒப்பற்ற வெண் கொற்றக்குடை, அகன்ற பெரிய உலகனைத்தையும் கவித்து இனிது வாழ்வதாகவென்று, ஒரு வயிற்றிலும் பிறவாது பிறந்து (சங்கார காலத்தே) உலகைத் தனது திருவயிற்றில் ஒடுக்கும் ஒப்பற்ற குழந்தை வடிவினராகிய திருமாலின் திவ்விய நாமங்களைப் பாடித் துதிப்போமாக.

நான் முகன்
(முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்னும்) நால்வகை நிலங் களையும், நாலு நெடிய கடல்களையும், நாற் குலங்களையும் காத்தளிப் போனும், தங்குலத்திற்குத் தீபம் போன்றவனுமாகிய அபயன் வாழ்க வென்று, நாலு உகங்களையும் நால் வேதங்களையும் நாலு முகங்களையு முடையவராகிய பிரமாவை வணங்குவோமாக.

சூரியன்
கடல்சூழ்ந்த உலகனைத்தும் பரந்த குற்றமாகிய இருள் நீங்க, ஒப்பற்ற ஆஞ்ஞா சக்கரத்தை நடத்துகின்ற வெற்றியாலுயர்ந்த அபயன் வாழ்வா னாகவென்று, கடல் சூழ்ந்த உலகனைத்தும் விளங்கவும் வளர்கின்ற இருள் மாயவும் ஒற்றைச் சக்கரமுடைய தேரை ஊர்ந்துசெல்லும் சூரியனை வணங்குவோமாக.

கணபதி
திக்கியானைகளைக் கட்டும் தறிகளை வெற்றித் தம்பங்களாக நாட்டி, ஒரு கவிப்பில் உலகனைத்தையும் மூடும் அருட்குடை யுடையவனும், வறுமைக்குப் பகைவனுமாகிய அபயன் வாழ்வானாகவென்று, நான்கு வேதங்களாகிய கூடத்தில் அணைந்து யோகிகளின் யோகக் கருத்தென்னும் ஒரு தறியிற் கட்டுண்டு நிற்கும் ஐந்துகரமுடைய ஒரு களிறாகிய கணபதிக்கு அன்பு செய்வோமாக.

முருகவேள்
இரு குலமும் நிலைபெறுமாறு ஒரு குடையின்கீழ் நான்கு கடலையும், நான்கு திசைகளையும் பெற்றுள்ள சூரிய குல உத்தமனாகிய அபயன் வாழ்வானாகவென்று, இரண்டு பொன் வரைகளை வென்ற பொருதற்கரிய மார்பையும், பன்னிரண்டு புயங்களையும், பன்னிரண்டு கண்களையும் உடைய முருகக் கடவுளின் சீபாதங்களைப் பணிவோமாக.

நாமகள்
“எண்ணுக்கடங்காத புகழை உடையோன் என் அரசன்; யான் அவனிடத் துறைதல் நன்று” எனப் புவிமாது கூறுவதை ஒப்ப, அவட்குப் புகழாகிய வெள்ளணி சாத்தி மகிழ்ந்த தலைவன் வாழ்வானாக வென்று, இலக்குமியும் வீரமாதும் புயத்திற்றங்கி வாழ, யாம் தனித்து உயரத்திருப்பே மென்று நினைவாள்போல, அவன் நாவிடத்தே தங்கியிருப்பாளைத் துதிப்போமாக.

உமையவள்
கோபித்துப் போர்க்கெழுந்த பாண்டியன் அடி சிவப்பவரைமீதோடி மறைய வில்வளைத்து, பின் அப்பாண்டியன், தன் முடிமீதுள்ள மலர், பாதத்திற் படும்படி வணங்கினமையால் பிழைபொறுத்த அபயன் வாழ்வா னாகவென்று, சிவந்த திருமேனியில் ஒரு பாதி கருமையுறச் சிவபெருமானை எய்த சிலையுடைய மன்மதன் கரத்துள்ள மலர்க்கணை பாதமலர்மீதும் அணுகமாட்டாத துர்க்கையின் மலர்ப்பாதங்களைச் சிரமீது கொள்வோமாக.

சத்தமாதர்
பன்றி, மேழி, யானை, வீணை, சிலை, மீன் என்று இவ்வகைப் பல கொடிகள் தாழ, மேருவில் நாட்டிய சோழரது புலிக்கொடி தழைப்பதாக வென்று எருமை, அன்னம், பேய், மயில், ஏறு, கழுகு, பருந்து, வேழம் என்ற ஏழு கொடியுடைய சோதியுடைய சத்தமாதரின், நினைப்பார்க்குத் துணையாயுள்ள பதினான்கு பாதங்களையும் வணங்குவோமாக.

வாழி
வேதவிதியின் ஒழுகும் மறையவர் தொழில் வளர்க; அவர் தொழில் வளர்தலால் முகில் நல்ல மழையைப் பெய்து செல்வத்துக்கு ஏதுவாகிய பயிர்வளம் நிறைக; பயிர்வளம் நிறைதலால் உயிர்கள் நிலைபெறுக; உலக முழுமையும் மனித குலம் தழைப்பதாக; சயதரனது புலிக்கொடி தழைவதாக; தண்ணிய ஒளி வீசுகின்ற அவன் வெண்கொற்றக்குடை வளர்வதாக.
கடைதிறப்பு
சோழர் பெருமானுக்குக் கொடுக்குந் திறையை கலிங்கர் வேந்தன் இறுத்திலன். அது காரணமாகச் சீற்றங்கொண்ட சோழன் கருணாகரத் தொண்டைமானின் தலைமையின்கீழ் ஒரு படையைக் கலிங்கர் மீது ஏவினான். அங்கு மூண்ட போரில் கலிங்கர் படை தோற்றது. கருணாகரன் வாகை சூடினான். கலிங்கர் போர்க்களத்தேவிட்டு ஓடின யானை, குதிரை, ஒட்டகம் முதலியவற்றையும், சூறையாடிய பொன்னையும், பல நிதிக் குவியலையும் கொண்டுமீண்ட கருணாகரத் தொண்டைமான் வேந்தனடி பணிந்து தான் எய்திய வெற்றியைப் புகன்று நின்றான். அதனைக் கேட்டுச் செவிகுளிர்ந்த மன்னன் மகிழ்ச்சியால் விம்மிதமெய்தி நகரிடத்து வெற்றி விழா எடுக்குமாறு கட்டளையிட்டான். அவ்விழாச் சிறப்புக் காண்பது காரண மாக நகர மாந்தர் வைகறைக் காலத்தே துயிலெழுந்து ஆரவார மிகுந்தனர். துயிலெழுந்த இளம் மகளிர் இன்னும் துயிலெழாதாரைக் கபாடந் திறந்து வெளியே வருமாறு கூறினர். கூவுமிடத்துப் பெண்களுக்குரிய மென்மைத் தன்மைகளையும், அவர் உறுப்புகளின் அழகிய இயல்புகளையும், நடை உடை பாவனைகளையும், அவர் கணவரோடு ஊடிப் பிணங்குதலையும், பின் ஊடல் தணிந்து இன்புறுதலையும், இவை போன்ற பிற இனிய பண்பு களையும் இனிதெடுத்து மொழிகின்றனர்.

வைகறைக்காலத்தே துயிலுணர்ந்த ஆடவரும் மகளிரும் தம்மைப் பலவாறு கோலஞ் செய்துகொண்டு மகிழ்ச்சி மிகுந்தவர்களாய் விழாக் காணச் சென்றனர்.
விழாவின் தலைவியாகிய காடுகெழுசெல்விக்குக் கூழாகிய அமுது படைக்கப்பட்டது. மக்கள் எல்லோரும் தேவியை இறைஞ்சி நின்றனர். அப் போது, தாம் அழகியாகப் புனைந்துவந்த பரணிப் பாடல்களைப் பலருங் கேட்டு பரவச முறும்படி சயங்கொண்டார் பாடுவாராயினர்.
காடுபாடியது
முதலாவது பாலைநிலத்தின் தன்மையைக் கூறுகின்றார்.

“காலையும் மாலையும் நண்பகலன்ன கடுமை கூரச் சோலை தேம்பிக் கூவன்மாறி நீருந்நிழலுமின்றி நிலம் பயந்துறந்து புள்ளும்மாவும் புலம்புற்று இன்பமின்றித் துன்பம்பெறும்” முதுவேனில் வெம்மையால் முல்லை, குறிஞ்சி முதலிய நிலங்களின் சில பாகங்கள் மரஞ் செடி புல் பூண்டு முதலியன தீந்து பாலைநிலமென்னும் பெயரைப் பெறும். 1பாலை நிலத்துக்குத் தெய்வம் காளி; காடுகிழாள், காடுகிழவோள், துர்க்கை, கொற்றவை, விந்தை, வீரமாது, உமை என்பன அவளுக்கு மறுபெயர்கள்.

போரில் மடிந்த கலிங்கரது நிணத்தை இட்டுச் சமைத்த கூழால் களப்பேயின் அடிவயிற்றினிரண்டு பக்கங்களையும் நிரப்பியதேவிக்கு இருப்பிடமாகிய பாலைநிலத்தின் இயல்பைக் கூறுகின்றேன். காரை, சூரை, வீரை, பாரை பாலை, ஓமை, வன்னி, நெல்லி, தும்பை, வேல், சுள்ளி, வெள்ளில், கள்ளி, வாகை இண்டங்கொடி, மூங்கில், புன்கு முதலிய மரங் களுஞ் செடிகளுங் கொடிகளும், வறந்தும் கரிந்தும் பொரிந்தும் பிளந்தும் முரிந்தும் பரந்தும் எவ்விடங்களிலும் கிடக்கும்.

வெய்யில் வெப்பத்தாற் பிளந்த நில வெடிப்புகள் தோறும் தனது சாயை புகுந்த வழியாது என்று சூரியன் தன் கிரணங்களாகிய கைகளை விட்டு ஆராயும். இரை தேடுதற்கு மேலே வட்டமிடும் பருந்தின் ஓரிடத்து நில்லாத நிழல், அவ் வெம்மையைத் தாங்கமாட்டாது ஓடித் திரிவதை ஒக்கும். ஓடுகின்ற நிழலன்றி ஓரிடத்தில் நிற்கும் நிழல் அவ்வனத்தில் எவ்விடத்துமில்லை. வெளியே நிற்பின் வெயில் பருகுமென்று, நீர்பெறாது உலர்கின்ற மரத்தின் அடியிற்போய் நின்ற நிழல் அம்மரங்கள் தம்மைப் பருகிவிடுமென அஞ்சி அவ்விடத்தினின்றும் மறைந்தது. சிவந்த நிலப்பரப்பு, நெருப்பைக் கொட்டித் தகடு செய்த தொத்தது. மீது பறக்கும் புறாவினங்கள், அந்நெருப்பிடத்தே திரண்டெழும் புகைக் கூட்டம் போன்றன. விடாயினால் வெதும்பிய மான் நெருப்பின் வாயில் நீர்பெறினும் உண்ணும் வேட்கை எய்தின. எய்திச் செந்நாயின் நாவின் வடியும் நீரை நீரென நாக்கினால் நக்கிவிக்கும்2. இக்கானம் பூமி யிலுள்ளோர் ஏகுதற்கு எளியதன்று. அதன் வெம்மையை உணர்ந்தே தேவர் நிலத்தில் அடியெடுத்து வையாதிருப்பது. இக்காட்டில் ஒரு கணமேனும் தரித்தன்றி ஊடுபோதல் அரிது என்பதை அறிந்தே சூரியனுடைய பச்சைக் குதிரைகள் இருபொழுதும் இயங்காமலிருப்பது கரியமுகிலும் வெண்மதி யும் இக்காட்டைக் கடப்பேமென்று அப்பால் ஓடி இளைத்து உடல் வியர்த்த வியர்வையே சொரிகின்ற மழையும் பனியும் ஆவன. விண்ணோர் ஆகாயத்தே முகிலாகிய திரையிட்டுச் சந்திரனாகிய விசிறி கைக்கொண் டிருப்பது இவ்வனத்தின் வெம்மையைக் குறித்தே.

“இந்நி லத்துளோ ரேக லாவதற்
கெளிய கானமோ வரிய வானுளோ
ரந்நி லத்தினில் வெம்மை யைக்குறித்
தல்ல வோநிலத் தடியி டாததே.”

“விம்முகடு விசைவனதின் வெம்மையினைக்
குறித்தன்றோ விண்ணோர்விண்ணி
னம்முகடு முகிற்றிரையிட்ட முதவட்ட
மாலவட்ட மெடுப்பதம்மா.”

புகைந்து கரிந்துநின்ற மரங்கள், நிலம் இடம் பெயர்ந்து போகாமல் தேவி நிறுத்திய பேய்கள் வருந்தி நின்று பெரு மூச்செறிவது போல்வன. முதியமரப் பொந்தினின்றும் புறப்படும் கிழப்பாம்புகள், உணவின்றி வற்றிய பேய், வாய் காய்ந்து வறண்ட நாக்கை நீட்டுவது போல்வன.

பார்ப்போரின் விழிகள் சுழலும்படி மிதந்து வருகின்ற கானல்நீர்ச் சுழி போலச் சூறாவளி சுழன்று பிணச் சாம்பலைச் சிதறடிக்கும். சாம்பர் இறந்த வரின் ஆபரணங்களினின்றும் உதிர்ந்த மணிகளைப் புதைக்கும்.

அதனால், அம்மணிகள், தழல் போலவும், சாம்பல் பூத்த நெருப்புப் போலவுந் தோன்றும். நிலம் வறண்டு ஓடி வெடித்த பிளப்புகளின் வழியே மூங்கில் முத்துக்களைச் சொரியும். அம்முத்துக்கள் மூங்கில் இரங்கிச் சொரி யும் கண்ணீரையும், கண்டோர் வருந்தி உகுக்கும் விழிநீரையும் ஒக்கும். மூங்கிலின் கணுக்கள் வெடித்து விசையோடு சிந்துகின்ற முத்து, நிலம் புழுங்கி மென்மேலும் வியர்த்த வியர்வையை, அல்லது கொண்ட கொப் புளங்களை ஒத்தன.

வெவ்விய கொடிய இக்கானினின்றும் வீசுகின்ற காற்று வருவதைத் தடுக்கவே கடல் வலிய திரைகளாகிய கரங்களைக் கரைமீது மேன்மேலும் பலமுறை வீசுவதும், திக்கியானைகள் செவிகளை வீசிக் காற்றை எழுப்பு வதும் என்க. பாண்டியர்க்கும் விசயதரனுக்கும் முன்னொருகாற் போர் மூண்டபோது பாண்டியர் தோற்று முள்ளும் கல்லும் பரந்த வழிகளால் ஓடினர். அப்போது வெள்ளாறுங் கோட்டாறும் புகையான் மூடிவெந்த தன்மை போன்றது, தேவி உறைகின்ற இக்காட்டின் இயல்பு.
கோயில்பாடியது
“ஓதி வந்தவக் கொடிய கானகத்
துறைய ணங்கினுக் கயன்வ குத்தவிப்
பூத லம்பழங் கோயி லென்னினும்
புதிய கோயிலுண்டது விளம்புவாம்.”

மேற்கூறிய பாலைநிலத்தில் வதியும் தேவிக்கு, பிரமன் வகுத்த இந்த உலகம் பழங்கோயிலெனினும், அவளுக்குப் புதிய இயல்பினையுடைய தோர் கோயிலுண்டு. அதனை ஈண்டு கூறுகின்றேன். வட்டமான வெண் கொற்றக் குடையுடைய விசயதரனுடன் பொருது வாள்வாய்ப்பட்டுமடிந்த மன்னருடன் உடன்கட்டை யேறிய பட்டத்துத் தேவியரின் ஆபரணங்களிற் கிடந்த நவரத்தினங்கள் கொண்டு ஆலயத்தின் கற்பக்கிருகம் அமைக்கப் பெற்றது. இரத்தந்தோய்ந்த செந்நிறக்களிறுடைய சேரன் ஏவுதலின், விசயதரனதுவாள் தம்முடலிற் பட்டுருவும்படி நேர் நின்றெதிர்த்து வீழ்ந்த வீரரின் கரிய தலைகளைக் கல்லாக அடுக்கி, அவர் நிணத்தோடு இரத்தநீர் பெய்து குழைத்த சேற்றை எறிந்து, சுவர் எடுக்கப்பெற்றது. அறிஞர்களது தலைவனாகிய அபயனது யானைகள் பகை அரசரின் மதில்களைப் பெயர்த் தெறிந்தபோது கிடைத்த கணையமரங்கள் அம்பினால் எழுதிய தூண்களாக வும் உத்தரங்களாகவும் அமைந்தன. கூரை, மதிலைப் போரில் விரைவில் அழிந்து மடிந்த யானைகளின் கொம்புகளைத் திரண்ட கை மரங்களாக இட்டு, பழுவெலும்புகள் பாமரங்களாக அடுக்கப்பட்டது.முன்னொருபோது அபயன் வலியுடைய குதிரையைச் செலுத்தி விருதராசரைப் பொருது வென்றபோது கிடைத்த யாளி, யானை, பன்றி, சிங்கம் முதலியன நிலைச் சட்டத்தின்மீது அழகுதரும்படி நிறுத்தப்பட்டன. துங்கபத்திரையின் சிவந்த களத்து அபயன் வாளால்வெட்டுண்ட கொடிய கோபமுடைய யானையின் முகபடாம் வெளியடங்கும்படி மேலே போர்க்கப்பட்டது. இவ்வாறுடையது கோயிலின் அமைப்பு.

கொள்ளிவாய்ப்பேய் காக்கின்ற கோபுரமும் நெடியமதிலும் வெள்ளியாற் அமைந்தனபோல் வெள்ளெலும்பினால் எடுக்கப்பட்டவை. வாயிலிடத்தே இரண்டு கரும்பேய்கள் தூண்களாக நிற்க மீது ஒரு கரியபேய் வில்லாக வளைந்துகிடக்கும். இரும்புச் சலாகையில் தூங்குவதுபோல் அதனிடத்தே பல மகர தோரணங்கள் தொங்கும். அவை, வீரர் தம் கையி னாற் கழுத்தை அரிய மலர்ந்த முகத்தாமரைகள், வட்டமாகிய மதிலிற் றூக்கும் நிணக்கொடி, சிறுவரின் பசிய தலை, பணியாத பண்டியரின் பாய் கின்ற களிற்றின் சுளகுபோன்ற செவிகள் என்பனவாம். மதுரையினின்றும் பிடுங்கியதும், மணிஊசல் போன்றதுமாகிய மகரதோரணம் எதிரே நாட்டப் பெற்று விளங்கும்.

அடியார், குதிரையின் வாலாகிய கூட்டுமாற்றினால் தேவியின் கோயிலை அலகிடுவர்; நிணமாகிய பூவைச் சிந்துவர்; சுடலை விளக்கை ஏற்றுவர்.

இளைக்காத சிறந்த வீரமும் தறுகண்மையுமுடைய வீரர், “தேவீ! எங்கட்கு யாம் விரும்பும் வரங்களைத் தருவாய்; வரத்துக்குத் தக உறுப்புக் களைப் பலியாக அரிந்து தருவோம்” எனக் கூவித் துதிப்பர். துதிக்கும் அவ்வொலி கடல் ஒலிபோற் பரக்கும். சிலர் சொல்லுதற்கரிய பெரியஓமத்தீ வளர்ப்பர்; வளர்த்திருந்து தொழுது பழுவெலும்பைத் தொடராகப் பிடுங்கி வலிய நெருப்பில் விறகாக இடுவர். சிலர் தம் நெடிய சிரத்தை அடிக் கழுத்தோடு அரிவர்; அரிந்த சிரத்தை அணங்கின் கையிற் கொடுப்பர்; கொடுத்த சிரம் தேவியைப் பரவும்; குறையுடல் கும்பிட்டு நிற்கும்.

உயர்ந்த பலிபீடத்தில் அறுத்துவைத்த வளைந்த உச்சிக் கொண்டை யுடைய சிரத்தை ஆண்டலைப்புள் தன்னினமென்று அருகணைந்து பார்க்கும்: பார்த்தலும் சிரம் அதனை அச்சுறுத்தும்.

“சலியாத தனியாண்மைத் தறுகண் வீரர்
தருகவரம் வரத்தினுக்குத் தக்க தாகப்
பலியாக வுறுப்பரிந்து தருது மென்று
பரவுமொலி கடலொலியிற் பரக்கு மாலோ.”
“சொல்லரிய வோமத்தீ வளர்ப்ப ராலோ
தொழுதிருந்து பழுவெலும்பு தொடர வாங்கி
வல்லெரியின் விறகாக விடுவ ராலோ
வழிகுருதி நெய்யாக வளர்ப்ப ராலோ.”
“அடிக்கழுத்தி னொடுஞ் சிரத்தை யரிவ ராலோ
வரிந்தசிர மணங்கின்கைக் கொடுப்ப ராலோ
கொடுத்தசிரங் கொற்றவையைப் பரவு மாலோ
குறையுடலுங் கும்பிட்டு நிற்கு மாலோ.”
“நீண்டபலி பீடத்தி லறுத்து வைத்த
நெறிகுஞ்சிச் சிரத்தைத்தன் னினமென் றெண்ணி
யாண்டலைப்புள் ளருகணைந்து பார்க்கு மாலோ
வணைதலுமச் சிரமச்ச முறுத்து மாலோ.”

கரியதலையை அரிந்து தேவி முன்னிலையில் வைத்த போதே ‘நமது கடமை தீர்ந்தது; இனிச் செய்யக்கடவது ஒன்றுமில்லை’ என்று மகிழ்ந்து உடல் துள்ளி விளையாடும்; விளையாடி விழுதலும் உவந்து உண்ணப் பசியுடைய சில பேய்கள் அவ்வுடலைச் சூழ்ந்து திரியும். ‘தேவீ! எருமையைப் பிளந்து கொண்ட பசிய உதிரம் இது; அன்போடு ஏற்றுப் பலி கொள்வாய்’ என்று மொழிந்து அடியவர் ஆரவாரிப்பர். அக்குரலோசை எட்டுத்திசையும் பிளந்து அண்டமுகடிடிந்து இடித்தாற்போல் முழங்கும். அப்போது பல தமருகங்கள் மொகுமொகுவென்று ஒலிக்கும். அவ் வோசையைக் கேட்டு, தேவியை மகிழ்வித்து அநாதியாய் வருகின்ற மெய் காப்பாளரும், படைக்கலங்களை வலக்கையிற் பிடித்தோரும், உடையின்றி இடைதுவள நிற்போருமாகிய யோகினி மாதர் வெளிப்படுவர்.

எல்லாத் திசைகளிலும் நெடிய மூங்கில் மீது விழித்த பெரிய தலைகள் தூங்கும். தூங்கும் மத்தலைகளின் சிரிப்பைக் கண்டு சுழலுகின்ற கண் ணுடைய அச்சந்தரும் பேய் தூக்கத்தை மறந்திருக்கும். அரிந்த தலை களோடு கூடி ஆடுகின்ற மூங்கில், உயிர்களைக் கவரக் காலனிட்ட நெடுந் தூண்டில் போற்றோன்றும்.

கொள்ளிவாய்ப்பேய் வாய்க்கினிய சிவந்த தசையைத் தேடிச்சென்று நரிவாயின் நல்லதசையைப் பறிக்கும்; பறித்துக் கொல்லென்னும் ஓசை யுடைய கிழநரியின் ஊளைச் சத்தம் முழவாக தன் குழவிக்கு ஊட்டும்1. நிணத்தையும் தசையையும் பருந்து கவர, நெருப்பும் பஞ்சும் போற்றோன் றும் பிணங்களும், பேயும், குறுக்கு நெடுக்காகச் செல்லும் வழிகளும் அக் கோயிலிடத்துண்டு. இவ்வாறமைந்துள்ளது தேவி உறையும் காளி கோட்டம்.
தேவியைப்பாடியது
தேவியின் அவயவங்கள் இவை இவை என அறிந்துரைப்பது ஒருவர்க்கு அமைவதன்று. யாம் புகழப் புகழ வருகின்ற அவற்றையே தமக்கு அவயவங்களாகக் கொண்டு மகிழும் தேவியின் அவயவங்களை ஈண்டு கூறுகின்றேம்.

மேருவை மத்தாகக்கொண்டு சுரரும் அசுரரும் அமுதங் கடைதற்கு நாணாகிய வாசுகி, தேவியின் ஒரு காற்சிலம்பு. பூமியைத் தன் முடிகளாற் றாங்குகின்ற ஆதிசேடன் மற்றொரு சிலம்பு. இப்பணிகளாகிய பாதசரங்கள் மீது முத்துகளும் நட்சத்திரங்களும் இடையிடையே வைத்துத் தைக்கப் பட்டுள்ளன.

சேடனும் திக்கு யானைகளும் பூமியைத் தாங்கிய காலத்துத் தேவி பூமிமீது அடி எடுத்து வைத்தாள். அப்போது அது சேடனதும் திக்கியானை களதும் பிடரியுட் குழிந்து நடுங்கிற்று. பின்னர், புகழ்படைத்த விசயதரன் அதனைத் தாங்கிப் பரணிதரித்தான். தேவி, அதற்குமகிழ்ந்து அவனைப் புகழ்ந்து பாடித் தாளத்துக்கு ஆடினாள்; அவள் இவ்வாறு ஆடும் நடனத் தினள்; பரந்த சடையும் மூன்று கண்களுமுடைய பரமன் கொடுத்த யானை உரிமீது அதன் குடரையும் பாம்பையும் உதரபந்தமாக இறுகக்கட்டிய உடையினள் பிரமனையும் கரியமுகில் வண்ணனையும், மதம் பாயும் பெரிய கன்னமுடைய யானைமுகமும் பொன்னிறமு முடைய விநாயகக் கடவுளையும், அவுணர் கூட்டம் மடிய வில் வளைத்து அம்பு ஏவிய முருகக் கடவுளையும் ஈன்ற திருவயிற்றினள்; மார்பிடத்தணிந்த முத்துமாலையொடு பவளமாலையை ஒத்துவிளங்க அணிந்த தழலைஉமிழ்கின்ற பாம்பாகிய உத்தரியத்தள்;

இமையவரையிலுள்ள பொன்குவியல் உருகவும் கடலிடத் துள்ள திரைசுவறிப் புகையவும் ஆலகால விடம் திசைகளைச் சுடுகின்ற காலத்து இமையவரைக் காத்தற்கு இருண்ட மிடற்றினராகிய இறைவற்கு இனியள்; சிரமறுத்த கழுத்தினின்றும் பெருகித் ததும்பி அலை வீசும் இரத்தத்திற்கெதிராகக் கைகளை நீட்டி முகந்து மிகவும் குடித்தலால் ஏறிய சிவப்பைத் திக்கியானைகளின் மதநீரிற் கழுவிக் கருமைபெற்று விளங்கும் மலர்க்கரத்தினள்; தன்னை நோக்குகின்றவரும், தலை மாலை அணிந்தவரு மாகிய சிவபெருமானது நடனச் சுழற்சிக் கேற்பச் சுழன்றுலாவுகின்ற பார்வை படுதலால் அப் பெருமானை வருத்துகின்ற பகை அற்று ஒழியும் படி ஆடுகின்ற குரவையள்; சிறிய மழலை மொழியுடைய சிவந்த வாயிடத்துப் புன்முறுவல் பூக்கும் முத்துப்போன்ற எயிறுடைய அழகிய வதனத்தள்; அருமறை ஒப்ப உலகில் அருள்நெறி நடத்தும் விசயதரன் உதித்த இரண்டு மரபினுக்கும் ஒப்பச் சூரியனையோ சந்திரனையோ ஒத்த திலகமிட்ட நெற்றியள்; பிரணவத்தின் உட்பொருளாய் எல்லாப் பொருள் களிலும் வியாபித்திருக்கும் அவளது தன்மையை எவ்வாறு எடுத்துரைப் பேன். விண்ணைத் தடவும் மலைக்கூட்டம் அவள் ஒருகால் காதிலணியும் குண்டலங்களாம். அவை, கோத்தணியின் மணிவடங்களுமாம். அக்கிரி குலங்கள் அவள் மலர்க்கைகளால் எடுத்து விளையாடு அம்மானைக் காய்களும் பந்துங் கழங்குமாம்.

“அண்டமுறுங் குலகிரிக
ளவளொருகா லிருகாதிற்
கொண்டணியுங் குதம்பையுமாங்
கோத்தணியின் மணிவடமாம்.”
“கைமலர்மே 1லம்மனையாங்
கந்துகமாங் கழங்குமா
மம்மலைக ளவள்வேண்டி
னாகாத தொன்றுண்டோ.”

பேய்களைப்பாடியது
எல்லா அணங்கும் வந்து அடிவணங்கும் பெருமை சான்ற தேவியை விட்டகலாத பேய்க்கணங்களின் இயல்புகளை இனிக் கூறுவோம்.

அப்பேய்கள் நீண்ட பெரிய பசியை இடும் கொள்கலம் போன்றன; ஒரு நாளைப்போற் பலநாளும் பசியால் மெலிவன; பனங்காட்டின் கரிய பெரிய பனைகள் முழுமையும் தமக்குக் காலுங்கையுமாயின போன்றன; வலிய நிலப் பிளப்பை ஒத்த வாயின; வாயினால் உண்டு நிறையாத வயிற்றின; இருப்பின் தலைக்குமேல் மூன்று முழம் மேலே செல்லும் அழகிய முழந்தாளின; வெற்றெலும்பினை நரம்பிற் பிணைத்து வேயாத இறப்புப்போன்ற உடலின; ‘வேலை இல்லேம், பெறும் கூழும் இல்லேம், எங்களை ஆட்கொள்வது உனது கடன்’ என்று தேவியை நோக்கி அலறுவன; உட்பக்கம் ஒடுங்கி இரண்டும் ஒன்றாக ஒட்டி விடாத கதுப்பின; மலைக் குகைக்குள் நெருப்புக் கொள்ளியைக் கொண்டு உட்புகத்தோன்றும் மலை முகை போல விழிக்கும் கண்ணின; வற்றலாக உலர்ந்து மரக்கலம் போன்ற முதுகின; பெரும்புற்றெனப் பாம்பும் உடும்பும் உறங்கும் கொப்பூழன; பாம்பு நெளிவதுபோல் வளைந்த மயிரும், பாசி படர்ந்த பழைய துளையு முடைய மூக்கின; ஆந்தை பதுங்கி யிருக்க வெளவால் புகுந்து அங்கு மிங்கு முலாவும் செவியின; மண்வெட்டியும் மேழியும் கோத்தாலன்ன பல்லின; ஓந்தியைப் பாம்பிடை கோத்தணியும் தாலிய; வானைத் தட்டி உடைத்திடும் தலையின; தாழ்ந்து மார்பை முட்டும் உதட்டின; பக்கத்தே கிடக்கும் நீண்ட மூங்கிலைக் காணின் `என் அன்னை, என் அன்னை, என்று கூத்தாடும் குழவிய; ஒட்டல் ஒட்டகங்களைக் காணில் என் பிள்ளையை ஒக்கும் ஒக்குமென்றாக்கலை கொள்வன. இவ்வியல்பின வாம் பேய்களெல் லாம், உறங்குதற்கிது சமயம் என்று கூறுதலும் தேவியை வணங்கி அவள் சொன்ன இடத்தை விட்டகலாது அருகாமையில் நின்றன.

ஒருகால், முகில் வழங்குதலினும் அதிகம் பரிசிலர்க்களித்திடும் பொற்கரமுடைய அபயனது புலிக்கொடி துரத்திச் செல்லக் கயற்கொடி கடிய சுரத்தில் மறைந்தது. நின்ற பேய்களுட் சில அக்கொடிய சுரம்போலப் பசி யால் வயிறு காய்ந்து முதுகு தீந்தன. சில ஆளைக் கோபிக்கின்ற களிறுடைய விசயதரன் பொருகின்ற களத்து வீழ்ந்த அரசர் சிரத்தினின்றும் தெறித்த முளைச் சேற்றில் வழுக்கி விழுந்து முற்றாகக்கால்மொழிபெயர்ந்து முட முற்றன. சில அப்போரிடத்தே அடும் களக்கூழுக்கிட, காய்ந்த வெண் பல்லரிசியை உரலி லிட்டுத் தீட்டின. அப்போது நீண்ட யானைக் கொம் புலக்கை படுதலால் அவற்றின் வலக்கைகள் குறைந்து முடமாயின. விருத ராசர் பயங்கரனாகிய விசயதரன் முன்னொரு நாள் சக்கரக் கோட்டத்தை வெற்றி கொண்டான். அப்போது அங்கு அட்ட கொதிகூழ் பட்டுச் சில குரு டாயின; காவேரி பாய்கின்ற வண்டல் பரந்த நாடுடைய விசயதரனை வாழ்த்தி, மதுரைப் போர்க்களத்துச் சுவைபிறக்க அட்டு உண்ட களக்கூழோடு நாவுஞ் சுருண்டு புகுந்து உள்விழுந்து, சில முற்றும் ஊமைகளாயின; ஐம்படைப் பிராயத்தனாகிய விசயதரன், குதிரை ஒன்று ஊர்ந்து ஆனைமடியும்படி பொருத திமிரிப் பறந்தலைப் போரில் சேனை வீரர் நின்று ஆர்த்திடும் ஆர்ப்பினில் சில செவிடாயின. பண்டு தென்னவர் சாய, அதற்குமுன் ஏவல் செய்த பூதகணங்கள் அனைத்தையும் பேய்கள் கொண்டுவந்து கூட்டின. அப்பொழுது இடாகினி முதலிய அக்குமரி மாதர்க்குப் பணி செய்தற்குச் சில1 குறளாயின. பரந்த கடலுடைய கடாரம்2 அழிந்த அன்று இரத்த வெள் ளத்திற் பாய்ந்து மூழ்கியும் நீந்தியும் ஆடிய பேய்கள் குரங்குவாதம் பிடித்து வலித்துக் குடி முழுதும் கூன் முதுகாயின. சில,

3“சிங்களத்தொடு தென்மது ராபுரி
செற்ற கொற்றவன் வெற்றிகொள் காலையே
வெங்க ளத்தி லடுமடைப் பேய்க்கெலாம்
வேலை புக்கு விரல்க டறிந்தவும்.”

ஆக உடற்குறை யுற்றன.

இந்திரசாலம்
இவ்வியல்பினவாகிய பேய்கள் இருபுறத்தும் தொழுதிருந்தன; எலும்பாகிய பீடத்தின்மீது மெல்லியகுடர்க் கச்சுடுத்துச் சிவந்த குருதியிற் றோய்ந்த சிறு பூதமாகிய தீபக் காற்கட்டில் இடப்பட்டிருந்தது. அதன் மேல், ஐந்து பிண மெத்தைகளடுக்கி, பேயை அணையாக முறித்திட்டுத் தூய வெள்ளை நிணமெத்தை விரித்து நிலா ஒளிசெய்கின்ற உயர்ந்த பஞ்சசயனத்தின்மீது தேவி வீற்றிருந்தாள். போரிற் புறங்கொடுத்தோடிய பாண்டியர் எறிந்துசென்ற 1பிண்டிபாலங்களை ஏந்திய இடாகினிகள் 2ஈச்சோப்பியை இரட்டி இருமருங்கு மிருந்தன. அப்போது, போர் யானை யின் எலும்பை எடுத்து நரம்பாற் கட்டியதும், தலைமுறை தலைமுறையாக வருகின்றதுமாகிய பிரம்பைக் கையிற் பிடித்து அமரில் மடிந்த வீரரின் குடர் மாலையைச் சூடினதும், நிணச்சட்டை இட்டதுமாகிய 3கோயில் நாயகப்பேய், எதிரில் வந்து கும்பிட்டு நின்றது; நின்று “தேவீ! அன்று சுரகுருவின் தூதாக இயமனிடத்துச் சென்றோன் கொய்துவைத்துச் சென்ற 4சிரத்தைத் தின்ற பேயின் கழுத்தை அரியும்படி சில பேய்களுக்கு ஆணை யிட்டாய்; அப்பேய்க்கு உறவாயிருந்து ஒளிந்தோடிப்போன சில பேய் களைக் குறித்த ஞாபகம் தேவி திருவுள்ளத்தில் உண்டன்றோ.

அப்பேய் களுள் ஒரு முதுபேய் இன்று வந்து புறக்கடையில் நின்று, ‘தேவியிடஞ் சென்று யான் வந்திருப்பதைத் தெரிவிப்பாய்’ என வேண்டிற்று. அப்பேய் முன் இவ்விடத்து ஒரு தீங்குஞ் செய்திலது. தேவியின் திருவுள்ளம் யாதோ?” என விண்ணப்பித்தது. அதனைச் செவிக் கொண்டே தேவி, “அப் பேயை உள்ளே அழைத்து வருக” எனக் கட்டளையிடலும், கோயினாயகப் பேய் அம்முதுபேயை உள்ளே புகுத்திற்று. அப்பேய் அஞ்சி அஞ்சித் தேவிமுன் வந்து அடிபணிந்து, “தேவீ! நின் ஆணைகடந்த பிழையைப் பொறுத்து எனக்கு அருள் செய்” என வேண்டிற்று. உணவுக்கு ஆவல் கொண்டு பிழை இழைத்த அப்பேயைத் தேவி கடாட்சித்து, “சுரகுருவின் தூதன் கொய்து வைத்த தலையை அன்றே அவன் பெறுமாறு செய்தேன். நீ செய்த பிழையை இன்று பொறுத்தேன்” எனப் புகன்றாள். புகலலும் அம் முதுபேய், “தேவீ! நீ இவ்வாறு மகிழ்ந்து திருவாய் மலர்ந்தருளினமையின் உய்தேன். ஒன்றோடொன்றொத்த ஓராயிரம் இந்திரசால விச்சைகளைக் கற்றுவந்துளேன், அவற்றை இருந்து கண்டருளுதி” என இயம்பி விச்சை களை இழைத்துக் காட்டாநின்றது.

“இக்கையிடத்துச் சில துதிக்கைகளைப் பார்; அவற்றை மாறி இக்கை யிலழைக்க அவை மதயானைத் தலைகளாயின பாராய். இக்கரித் தலையின் வாயிடத்து உதிர் நீரைக் குடித்த பேய்கள் இடிமுழக்கம்போற் கொக்கரித்துச் சுற்றி வருவதைப் பாராய். இவை கொஞ்சமல்ல; இதுகிடக்க, எம்முடைய அம்மை வாழ்கவென்று பேய்கள் கத்தும் வேகத்தைப்பார். அபயன் கடக்கத்தை வென்று அன்று களத்தே கொண்ட பரணியை இன்று பார்; உதிர ஆறுகள் பல ஓடுவதைப் பார்; உவை அற்ற தோள்கள்; அவற்றை ஆறு அலைத்தலைப் பார்; அறாத நீண்ட குடல்கள் மிதப்பதைப் பார்; துணிந்த தோள்களை நரிகள் இழுப்பதைப் பார்; மூளைச் சேற்றில் அடிவழுக்குதல் பார்; நிணத்தையும் நிணமணங்கனிந்த நிலத்தையும் பார்; நிலம் அடங்கலும் பிணங்களைப் பார்.

இவை கிடக்க, நம்முடையன வல்லாத சில பேய்களைப் பார்” என்ற போது உடனிருந்த பேய்கள் மெய்யென நினைந்து ஊனை உண்ணக் கருதி ஓடி ஒன்றின் மேலொன்று கால் முறிய விழுந்தன; விழுந்து கொழுவிய இரத்த நீரென்று கையை முகந்து முகந்து ஒன்றுமின்றி எழுந்தன; விழுகின்ற தசையென்று நிலத்தை யிருந்து தடவின.
சில பேய்கள் உடுக்க நிணத்துகில் பெற்றனமென்று சுற்றுங் கையின; சில, அற்ற குறைத்தலையென்று விசும்பை அதுக்கும் எயிற்றின; கயிற் றுறியை ஒத்த ஒரு பேய்; பிணத்தைக் கௌவினதொப்ப வறிதே எயிற்றை அதுக்க, நிரைத்து நின்ற பேய்கள் மேல்விழ ஓடி இரைத்தன; விழுந்து பல முறங்கள் போன்ற நகங்கள் முறிந்து, முகமுஞ் சிதறி முதுகும் முறிந்து விலாக்களும் ஒடிந்தன; இதனைக் கண்ணுற்று யோகினிமாதர் விலா இறச் சிரித்தனர்.

“கயிற்றுறி யொப்பதோர் பேய்வறி தேயுடல்
கௌவின தொக்க விரைந்
தெயிற்றை யதுக்க நிரைத்திடு பேய்க
ளிரைத்தன மேல்விழவே.”

“முறம்பல போல நகங்கண் முறிந்து
முகஞ்சித றாமுதுகுந்
திறம்பி விலாவிற யோகினி மாதர்
சிரித்து விலாவிறவே.”

அப்போது கணங்களெல்லாம் தேவியை வணங்கின; வணங்கி, “தேவீ! இவ்விச்சையை இப்பேய் தவிராவிடின் இக்கணங்களெல்லாம் உடனே மாளும்; ஆதலின் இவ் விச்சையைத் தவிரும்படி இக்கணமே ஆணைசெய்” என வேண்டிக் கையுதறி நின்றன.

அப்போது அம்முதுபேய், “தேவீ! வேந்தர் வேந்தனாகிய அபயன், கலைகளின் தன்மைகளை அறிவானென்று அறிஞர் எல்லாக் கலைகளை யும் அவனெதிரில் எடுத்தியம்புவர். அவன் ‘கற்றவர் கற்றவற்றின் அளவை கண்டு அருள் செய்வான்’. அதுபோல எனது விச்சையை இறுதிவரைக் கண்டருள்” எனப்புகன்று வணங்கிற்று. அது கேட்டு நின்ற கணங்கள் அம் முதுபேயைப் பார்த்து, “மாயப்பாவீ! மறுபடியும் எம்மை வருத்த நினைத் தனையாயின் தேவிமீது ஆணை” என்று ஆணையிட்டுத் தடுத்தன. தேவியும், “இனி இவ்விச்சை தவிர்” எனப் பணித்து, “நீ இவற்றை எங்குக் கற்றாய்” எனலும், முதுபேய், “தேவீ! அடியேன் நின் முனிவையும் சுரகுரு வின் முனிவையும் அஞ்சி இங்கிருத்தல் அரிதென்று இமயவரைச் சென் றிருந்தேன்;

அங்கு நின் பழைய அடியாரின் அடியாளாகிய தெய்வ உருத்திர யோகினி என்பாளை அடைந்தேன்; அவள் நின் முனிவும் சுரகுருவின் முனிவும் ஒழிதற்கான மந்திர விச்சைகள் பலவற்றையும் எனக்கு உபதேசித் தாள்; உபதேசித்து, ‘இவ்விடத்திருப்பின் உனக்குப் பல நன்மைகள் கிடைக்கு’ மெனக் கூறினள். யான் அவ்விடத்துச் சிலகாலந் தங்கியிருந்தேன். அங்குத் தங்கியிருக்கும் நாளில் நிகழ்ந்த சில செய்திகளை உரைப்பேன் கேள்” என்றனள்.
இராச பாரம்பரியம்
தமிழ்நாட்டிற் றன்னை எதிர்ப்பாரைப் பெறாத கரிகாற் பெருவளத் தான், போர்விருப்பால் வடதிசைக்கண் சென்றானாக, தேவருறையும் இமயக்குன்று குறுக்கிட்டது. அவன், தனது செலவைத் தடுத்துநின்ற குன்றை முனிந்து செண்டாலடித்துத் தாழ்த்தி மறுபடி நிற்கவைத்தான்; வைத்து அதன் முதுகில் தனது பாய்கின்ற புலிக்குறியைப் பொறித்தான். இதனை அறிந்து மூன்று காலமும் முற்றவுணர்ந்த கடவுட் குணம் வாய்ந்த நாரதன் என்னும் தெய்வ முனிவர், அப்போது அங்கெழுந்தருளினார்; எழுந்தருளி, “மன்ன! கடல் சூழ்ந்த இவ்வுலகில் உன்னை ஒத்த அரசர்களிலர்” என முகமன் கூறி ஆசீர்வதித்தார். ஆசீர்வதித்து, “அரச! நினக்கு யான் புகல்வ தொன்றுளது; அதைக் கேட்குதி” என்று கூறிப் பின் புகல்கின்றார்:

“முன்னொரு காலத்துப் பராசர முனிவரின் மகனாகிய வியாசர் பாரத மென்னுங் கதையைப் பகர்ந்தார். விநாயகக் கடவுள் தனது மருப்பொன்றை வாங்கி அதனைக் கையிடத்தே எழுத்தாணியாகப் பிடித்து மேருவின் சிகரம்ஒன்றின் புறத்தே அதனை எழுதினார். அதனால் உலகம் உரைத்தற் கரிய தவப்பயன் எய்திற்று. பாரதத்திற் கூறப்படும் கண்ணனின் புனிதமாகிய நல்ல கதைகளும், மெய்மையுடைய நான்கு வேதங்களுமே, இப்பொழுது கூறும் வரலாற்றுக்கு நேர். யான் கூறும் இக்கதைகளெல்லாம் இக்குன்றின் மிசை வரையப்பட்டுள்ளன. யான் கூறும் அக் கதைகளை நீ இவ்வெற் பிடத்தே எழுதுக.

“பாரதத்தின்கண் முதல்வனாகச் சொல்லப்படும் திருமால் என்னும் கடவுளைப்பற்றியும், பிரணவமாக அமைந்த வேதமும், அதன் பதத்தைக் கூறுபடுத்த வந்த பாதமும், பதமோடு பாதமாகச் சிலபல வந்தவகை ஆகிய வற்றைப் பற்றியும், இவை அடங்கி இருக்கும் இருக்கின் வழிவந்த வருக்க மும், வருக்கம் முழுதும் வந்த வட்டமும், நிகரில்லாத சங்கிதைகளும், வேதியர் விதி எனப்படும் மந்திர வகையும், பிரமா முதலாக உலகை முறை செய்து வருகின்ற உங்கள் மரபின் அரசர்களுமாகிய இவரின் வரலாறுகளை யும் நவில்கின்றமையின் இதுவும் குற்றமில் லாத வேதமாகும்.

“திருமாலின் உந்திக் கமலத்திற் பிரமன் தோன்றினான்; அவன் மரீசி என்னும் அரசனைப் பெற்றான். அவன் மகனாகிய காசிபன் அருக்கனைப் பெற்றான். அவன் மகனாகிய மனு பசுவின் கன்றுக்கு நேரெனப், பசுக் கன்றைக் கொன்ற தன் மகனைத் தேர்ச் சக்கரத்தின் கீழ் இட்டு உலகில் எல்லோரும் வியக்கும்படி நீதி அரசு புரிந்தான். அவன் இக்குவாகுவைப் பெற்றான். இக்குவாகுவின் பேரனான புரஞ்சயன், வெற்றியுடைய இந்திரன் ஆயிரங் கையுடைய ஐராவதத்தை ஊர்வதுபோற், களிறு ஒன்று ஊர்ந்து பகைவரை வென்றான். மாந்தாதா, சினமுடைய புலியும் மானும் ஒரு துறையில் நீர் பருகும்படி செங்கோல் ஓச்சினான். முசுகுந்தன் இமையோரை வென்று அவர் நாடு முழுதையும் அரண் செய்து ஆண்டான்.

ஒரு சோழன், கடல் கடைந்து கொண்ட அமுதைத் தேவர்களுக்கு அளித்தான். சிபி மெய்பதறாது தனது தசையை அரிந்து வைத்துத் தானும் புறாவோடு ஒரு துலையில் நின்றான். சுராதிராசன் என்னும் முதற் சோழன் சோழமண்டல மமைத்தான். அவன் மரபில் வந்த இராசகேசரி, பரகேசரி என்னும் இருவர் தமதாணை புலி ஆணையை ஒக்குமெனப் புலிக்கொடி நாட்டி ஒருவர்பின் ஒருவர் ஆட்சி புரிந்தனர். கிள்ளிவளவன் காலனுக்கு ‘இது வழக்கு’ என உரைத்தான். காந்தன் குடகு மலையைக் குடைந்து காவிரியாற்றைக் கொண்டு வந்தான். தனது ஆணைக்குட்பட்ட உயிர்கள் ஒன்றையும் கவராதபடி சுரகுரு இயமனை வென்றான். சித்திரன் புலிக்குப் பதில் இந்திரனைக் கொடியில் வைத்தான். சமுத்திரசித்தன் ஒரு கடல் மற்றக் கடலோடு கலக்கும் படி விட்டான். பஞ்சபன், தன் வலியால் உடம்பினின்றும் இரத்தத்தை இயக்கன் குடிக்கும்படி கொடுத்தான். ஒரு சோழன் காற்றுக் கடவுளை ஏவல் கொண்டான். தொடித்தோட் செம்பியன் தூங்கெயில் மூன்றை அழித்தான். ஒரு சோழன் பெரிய பாரதப்போர் முடியுமளவும் நின்று தருமனது கடல் போன்ற படைக்கு உதவி புரிந்தான். செங்கண்ணான் சேரமான் கணைக்கால் இரும்பொறையைப் போரிலகப்படுத்திக் காவலில் வைத்தானாக, பொய்கை யார் களவழிக்கவிதை நாற்பது பாடி அவன் தலையை வெட்டி விடுவித்தார்.”

கரிகாலன் இவ்வாறு முனிவர் கூறக்கேட்டுத் தனக்கு முன் விளங்கிய அரசர் வரலாறுகளை எல்லாம் மேருவில் எழுதினான். பின்னர், தான் களிறூர்ந்து சேர பாண்டியர்களைக் கொன்று வெற்றி பெற்றதும், தன்னை வணங்கி அரசர் அணை செய்கின்ற காவிரிக் கரையை அணைகட்ட வராத திரிலோசனனைப் படத்தில் எழுதிவரச் செய்து ‘இது மிகை’ என்று கூறி நெற்றிக்கண்ணை அழிக்க அவன் கண் அழிந்ததும், வரால்மீன் துள்ளிக் குதிக்கின்ற நீருடைய குடுமிநாட்டைக் தான் வென்றதும், பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார்க்குத் தான் பதினாறுலட்சம் பொன் அளித்ததும், முன்னொரு நாள் சேரனையும் பின்னொரு நாள் பாண்டி யனையும் போரில் அகப்படுத்தி அவர்கள் தலையில் விளக்கெடுப்பித்தது மாகிய தனது புகழ்ச் சிறப்புகளைப் பொறித்தான்.

அதன்மேல் “ஓர் சோழன் வேழம் ஏறிச்செலுத்தி வானவரை வெல்வான். பின் பராந்தக சோழன் பிறந்து ஈழத்தையும் தமிழ்க் கூடலையும் அழித்து வெற்றிபெறுவான். பின் இராசராசன் தோன்றிச் சதய நட்சத்திர விழாவைச் சேரநாட்டில் கொண்டாடுவான்; கொண்டாடி ஒரு தனிக் குதிரை யூர்ந்து உதயபானுவை ஒத்து உதகையை வென்று பல யானைகளைக் கவர்வான். அதன்மேல் கங்கை கொண்டசோழன் பிறந்து களிறுகளைக் கங்கை நீருண்ணச் செலுத்தி, மண்ணையிற்றடுத்து எதிர்க்கும் வேந்தனைச் சினந்துபொருது வெல்வான்;

வென்று கங்கைக்கு அப்பாலுஞ்சென்று ஒலித்துத் தெள்ளுகின்ற திரையுடைய கடாரத்தைக் கைப்பற்றி நாட்டைத் தன் குடைக்கீழ்க் கொள்வான். பின் இராசாதித்தன் தோன்றி யானை உந்தி, கடிய காவலுடைய அரணை அழித்து, கம்பிலியிற் சயத்தம்பம் நாட்டி அட்டகிரிகளிலும் புலிப்பொறி தீட்டுவான். பின் இராசேந்திரதேவன் பிறந்து ஒரு களிற்றை எதிர்க்கச் செல்கின்ற களிற்றை ஒத்து ஆதவமல்லனை எதிர்த்துக் கோப்பைப் பொருகளத்தே முடிகவிப்பான்; கவித்துப் பகைவன் பிடிக்கும் கொற்றக் குடையைத்தான் கவிப்பான். அப்பால் இராசம கேந்திரன் தோன்றி நூல்களுக்குத் தலைமையாயுள்ள நான்கு வேதங்களிற் பண்டு உரைத்த நீதி முறைகளைப் புதுக்கிப் பழைய மனுவினுக்கு மும் மடங்கு நான் மடங்காக நீதி செலுத்துவான்; செலுத்தின் தனது வெண் கொற்றக்குடை நிழலில் அறம் வளர்ப்பான். இவனுக்குப் பின் வீர ராசேந்திரன் தோன்றிக் குந்தளரைக் கூடற் சங்கமத்து அழிப்பான். பின், இந் நிலவுலகம் இவ னிடத்துச் சேர்ந்திருக்க என்ன தவஞ் செய்தது என்னும்படி விசயதரன் அவ தரிப்பான். அவதரித்துத் திரிலோகமுள்ளளவும், வேதங்களுள்ளளவும் சக்கரவாளகிரிவரையில் செங்கோல் செல்ல ஆட்சி புரிவான்.

தீக்கடைகோலிற் பிறந்த தீயினால் வேட்கும் வேள்வியில் வெளிப் படும் வடிவாய்ப் பாம்பணையிற் கண்வளரும் திருமால் முதலாக அபயன் தரணியை ஆள்வதுவரையுமுள்ள தனது தொன்மரபும், அம்மரபை மேலாகச் சொல்லும் புகழுமாகிய இவற்றை எல்லாம் ஒன்றும் ஒழியாது முனிவர் சொன்னபடி கரிகாலன் மேருவின் ஒருபுறத்தெழுதினான். எழுதி இதனைக் கற்றுப் ‘பிறருக்குச் சொல்வோர் செய்த பிழை எல்லாம் அரசர் பொறுக்க’ என முடித்தான். ஆதலினால் வணங்கி இதனைக் கற்றுவந்தேன்” எனக்கூறி முடித்து அம் முதுபேய் அஞ்சலி செய்து நின்றது.

இதனைச் செவிக்கொண்ட தேவி, கணங்களைப் பார்த்து, “பூமாதைக் கைக்கொண்ட அபயனது சிறப்பைக் கேட்ட என்னுள்ளம் அவனை ஈன்ற ஞான்றினும் பெரிதும் மகிழ்ச்சி பூத்தது. இப்பேய் சோழவமிச மரபினைக் கூறிய முறை மிக அழகுடையது . ஒரு வெண் கொற்றக்குடையின் கீழ் உலகு முழுவதையும் ஆள்கின்ற சயதுங்கனது கீர்த்திப் பிரதாபங்களை எல்லாம் நீவிர் கற்று உய்மின். அவனே பூதங்கள் எல்லாவற்றையும் காக்க வல்லான்” எனத் திருவாய்மலர்ந்தருளினள்.
பேய்முறைப்பாடு
இவ்வாறு திருவாய்மலர்தலும் பேய்கள் தேவியை நோக்கித்தங் குறையை முறையிடுகின்றன: “சடாபாரத்திற் கங்கா நதியைத் திரித்த சிவபெருமானின் திருவருளைப் பெற்ற பெருந்தேவீ! அபயன் காக்கின்ற பேறுடைய பூதங்களாகப் பிறவாமல் பேய்களாகப் பிறந்து கெட்டோம். எங்கள் குறையறிந்து நீ காவாதொழியின் பின் யார் காப்பார். பாழடைந்த ஊரைக் காக்க மதில் வேண்டாததுபோலப் பாழான எங்கள் உயிரைக் காக்க உடம்பு வேண்டாம். ஆகவே உடலைவிட்டு ஓடிச்செல்வேம். பசியால் ஓய் கின்றோம். ஓய்கின்ற ஓய்வுக்கு இனி ஆற்றேம். நீ பகைத்தாலும் உய்ய மாட்டோம். பசித்தீ பற்றி எரிதற்கு விறகாய் மெலியா நின்றேம். மெலிந்த உடலை விடுதற்கு உபாயமுங் காணேம். சாதற்கு நாங்கொண்ட ஆசை இவ்வளவும் போதும். பாழான சாக்காட்டையும் எமக்கு அரிதாக வைத்தாய். நாங்கள் சாவதற்குத்தான் முடியுமோ? முற்பிறப்பில் நாம் இழைத்த பாவத்தால் பிரமா இப்பிறப்பில் வயிற்றிற் பசியை வைத்தான். பசிக்கு ஒன்றும் பெற்றிலேம். காற்றடிக்கப் பதடிகள் போற் பறக்கின்றேம். பசியால் வருந்திப் பாதி நாக்கும் உதடுகளிற் பாதியுந் தின்று ஒறுவாய ஆனேம்.

தேவீ! அடியேங்கள் உய்யும் வண்ணம் கடைக்கண் நோக்காய். களங்கமற்ற விசயதரன் போர்க்கு இளையான். அரசரிடும் திறைக்கு அருளு வான். அவனது யானைகள் கட்டுத்தறியிற் கட்டுண்டு நிற்கின்றன. பெரும் பசியால் மெலிந்து நெற்றாய் உலர்ந்தேம். எங்கள் மூக்கின் அருகே சளியும் முடையும் நாற, உதடுகளை ஈ மொய்க்கின்றன. இந்நற்சகுன மொன்றால் மாத்திரம் உய்ந்திருக்கின்றேம்; இல்லையேல் இன்றே இறந்துபடுவேம்” என்று ஆர்த்தன.

அத்தருணம் இமயாசலத்தினின்றும் வந்த பேய், தேவியின் முன் வந்து அடிகளில் இறைஞ்சி, “தேவீ! அடியேன் வடகலிங்கஞ் சென்றிருந்த போது சில நிமித்தங்கள் தோன்றின; அவற்றைக் கூறுவேன் திருச்செவி கொண்டருள்.

“மதக்கரி மருப்பிற மதம்புலரு மாலோ
மடப்பிடி மருப்பெழ மதம்பொழியு மாலோ
கதிர்ச்சுடர் விளக்கொளி கறுத்தெரியு மாலோ
காலமுகில் செங்குருதி காலவரு மாலோ.”

“வார்முர சிருந்துவறி தேயதிரு மாலோ
வந்திரவி லிந்திரவில் வானிலிடு மாலோ
வூர்மனையி னூமனெழ வோரியழு மாலோ
வோமவெரி யீமவெரி போலெரியு மாலோ.”

“பூவியலு மாலைகள் புலால் கமழு மாலோ
பொன்செய்மணி மாலையொளி போயொழியு மாலோ
வோவிய மெலாமுடல் வியர்ப்பவரு மாலோ
வூறுபுனல் செங்குருதி நாறவரு மாலோ.”

இந்நிமித்தங்களால் விளையற்பாலன யாவை?” எனக் கூறி நின்றது.
அதனைத் திருச்செவிகொண்ட தேவி பேய்களை நோக்கி, “உங்கள் நிமித்தமும் வடகலிங்கத்து நிகழ்ந்த நிமித்தமும் உங்களுக்கே நன்மையைத் தரும்; அரசரது அணிவகுத்த படையை வென்ற அபயனது மதயானைகள் கோட்டிடத்தே நிணத்தைக் குத்தி நிற்பதாகக் கணிதப் பேய்கள் கண்ட கனவினாலும் அண்மையில் ஓர் பரணியுண்டு. உங்கட்கு இனிக் குறைவில்லை” என விளம்பினள்.

உடனே பேய்களெல்லாம், “இனிப் பெருமையுற்றோம்! இனி மிகவும் பெருமையுற்றோம்!!” எனப் பாடிப் பல தனிப்பனைகள் துள்ளுவ போற் றுள்ளி நடித்தன; நடிக்க வலிமை பெற்றன; கடைவாய்களையும் உதடுகளை யும் நாக்கினால் நக்கி நனைத்தன. விலாவின் அலகுகள் விம்ம உண்டது போற் களிப்பு மிகுந்தன; பசித்த பசியையும் மறந்தன. இவ்வாறு களிப்பி னால் ஆடி ஆரவாரித்த பேய்களெல்லாம் தேவியைப் பார்த்து, “அணங்கே! நாமெல்லோருங் கூடிக் கலிங்கக்கூழைச் சத்தமிட்டுக் குடித்தால் நமது கூடுகள் போன்ற வயிறுகள் நிறையுமோ?” என வினாவி விடையை எதிர்பார்த்து நின்றன.

அணங்கு, “நீங்கள் போதும் போதாதென்று கூட்டங் கூடி ஆலோ சிக்கவேண்டா. இக்கலிங்கப்போர் கடல் சூழ்ந்த இலங்கைப் போருக்கு ஒட்டி இரட்டியாகும்” என்றனள். அதைக் கேட்ட பேய்கள் நெஞ்சு குளிர்ந்து உற்சாகங்கொண்டன.

அவதாரம்
தேவி பேய்க்கணங்களை நோக்கிக் கூறுகின்றாள்:
“முன்னொருபோது இலங்கையைப் பொருதழித்த இராமனே கண்ணனாக வந்து பாரதப்போரை முடித்தான். அவனே, பகைவரை வென்று விளங்கும் ஒளியுடைய ஆணைச் சக்கரத்தை உருட்டும் விசயதரன் என உதித்தான். இன்னும் கூறக் கேளுங்கள்; முன்னொருபோது தேவரெல்லாம் திருமாலிடஞ் சென்று தங்குறையிரந்தனர்; திருமால் அத்தேவர்களின் வேண்டுதலுக் கிரங்கித் தேவகியின் திருவயிற்றில் வசுதேவற்குப் பிள்ளை யாக மூவுலகும் தொழும்படி திரு அவதாரஞ் செய்தார். அவரே மறுபடியும், பூமியிற் கலியிருளை நீக்க வேண்டியும், சூரியகுலம் இனிது ஓங்கவேண்டி யும், இராச இராசன் மகளாகிய மங்காதேவியின் திருவயிறாகிய ஆலிலை யில் வந்தவதரித்தார்; அவதரித்தலும், இனி மண்ணுலகும் நான்மறைகளும் துன்பம் நீங்கின என்று அந்தர துந்துபி அதிர்ந்து முழங்கின; பூமாரி பொழிந்தது. இவற்றைக் கண்டு மகிழ்ந்த கங்கை கொண்ட சோழனின் தேவி தன் மகளின் மகனைத் தன் தாமரை மலர்போன்ற கரங்களால் எடுத்தாள்;

எடுத்து, இவனிடத்து, அரசர்க்கெல்லாம் அரசனாக விளங்கும் அடை யாளம், முறையே இருத்தலைக் கண்டு ‘இவன் நமக்குச் சுவீகார புத்திரனாகிச் சூரிய குலத்தை விளக்க வல்லான்’ ஒன்று கூறி அவனைச் சுவீகாரங் கொண்டாள். இருகுலத் தரசரும் தனித்தனி சந்திரகுலத் தோன்றலிவ னென்றும், சூரியகுலத் தோன்றலிவனென்றும் எண்ணிப் பெருமையுறும்படி அக்குழவி வளரா நின்றது; வளர்ந்து, பண்டு வசுதேவன் மகனாகி அவதரித்துப் பூமாதின் துயர்களைந்த மாயன் இவனென்று கண்டோர் தெளியுமாறு, தனக்குரிய தண்டு, வில், வாள், சங்கு, சக்கரம் என்னும் பெய ருடைய ஐம்படையைத் தரித்தது. விசயதரன் சீற்றமுடைய புலி வளர்க்கும், சிறு புலி ஒத்தும், திக்கு யானை அணைத்து வளர்க்கும் வீரமுடைய யானைக் கன்றை ஒத்தும் உலகில் எல்லா அறங்களும் ஒருமித்து அடி வைக்கும்படி அடி எடுத்து வைத்தான். அறத்தோடு அறத்துறைகள் நடப்பது போல நடந்து நடைகற்றான். தாய் முலை சுரந்து பால் அளிக்கின்ற நாளே அவன் உலகுக் கருள் சுரந்தான்; தூய மனுநூலும் வேதநூலும் பொருள் விளங்க, சொற்றெரியப் பேச்சுப் பயின்றான்; அழகிய மார்பிடத்து வீற் றிருக்கும் இலக்குமியின் கழுத்தில் விளங்கும் மங்கல நாண் எனும்படி, அகன்ற மார்பில் முப்புரி நூல் கிடந்து விளங்க இரண்டாவது பிறப்பை எய்தினான்; அதன்மேல் ஞானம் நிறைந்த வாமனர் என்னும் சிறந்த அந்தணர்வடிவாய் மாவலியிடஞ்சென்று பூமி இரந்தபோது தான் ஓதிச் சென்ற நான்கு வேதங்களையும், வேதியர்பாற் கேட்டு மறுபடியும் கற்றான்; நிலமாது, நிறைந்த வாழ்வுபெற நமக்கு அணித்து என்று களிப்ப, வீரமாதைப் புயத்திருத்தி வீரவாளை அரையிற் செருகி வாள் வித்தை கற்றான்; இந்திரன் நான்கு மருப்புடைய ஐராவதத்தை ஊர்ந்து எதிர்த்தோரை வென்று வருவானாயின், யான் இரண்டு மருப்புடைய யானையை ஊர்ந்து உலகத்துப் பகைவரை வெல்வேனென யானையேற்றம் பயின்றான்; அருக்கன், ஒரு நாட்போல அன்று முதல் இன்றுவரையும் ஏழ்பரி உகைத்து இருள் கடிந்து வருவனேல், யான் ஒரு குதிரை உந்திப் பூமியின் கலியிருள் நீக்குவனெனக் குதிரை ஏற்றங் கற்றான்;

சக்கரம் முதலிய ஐம்படைகள் அவனுக்குரியன வாதலின் அவன் அவற்றிற் பழகிலன்; தமக்குத் திக்கு விசயத்தில் உதவுமென்று அவனது தாமரை மலர்போன்ற கரங்கள் அவற்றிற் பழகின; அவன் பொருட்டுப் படைக்கலம் பயின்ற கைகள் நோகப்பெற்றில; அவன் பயின்ற கல்வித் துறைகளைக் கூறின் மிகையாகும்; கூறவேண்டின் உலகத்து அரசரெவரும் இவற்கு ஒப்பில்லை என்னும்படி, அவை புகழ்கின்ற நிறைந்த கலைகள் ஒவ்வொன்றையும் துறை போகக் கற்றான். கலைகள் எல்லாம் பயின்றபின் இவன் மாமனாகிய வீரராசேந்திரன் இவனுக்கு இளவரசுப் பட்டங் கட்டினான். அதன்மேல் இவன் திக்கு விசயஞ்செய்து மாற்றரசரின் செல்வங்களைக் கொள்ளத் திருவுள்ளங் கொண்டான். இந்நினைவுடன் வளருங் காலத்து, ஒருநாள், மதயானையின் முகத்து வளைந்த நகங்களைப் புகுத்தி விளையாடும் புலிக் குட்டியைப் போலப் பகைவர் பொருமுனைகளைக் கிழிக்க எறிபடைகளைக் கையி லெடுத்தான். மேற்குத் திசையை அடைதற்குக் குதிரைகளைத் தூண்டுகின்ற தேருடைய சூரியன் உதயமாக மாயும் இருள்போன்ற, வடதிசைக் கண்ணுள்ள அரசரது பகை முகத்துத் தன் குதிரையைச் செலுத்தினான்;

செலுத்திச் சிவபொருமான் திரிபுரத்தை எரித்த ஞான்று எழுந்த தீ இது என்னும்படி தனது ஆஞ்ஞா சக்கரம், புகையோடு கூடி எரியைக் குவிப்ப வயிராகரம் என்னும் நகரைத் தீ மூட்டி, அரசர் கைகூப்பித்தொழ வாரண மூர்ந்து சென்றான்; சென்று குளம் சிதையும்படி மோதி ஒலிக்கின்ற கடலைப் போலப் பகைவர் தூண்டிய குதிரைப் படையை முறியவெட்டி, திரண்டு பொருதோரின் சிரங்களைத் துணித்து மலைபோலக் குவித்துத் தனது புருவத்தை ஒத்தவில்லை வளைத்துச் சக்கரவாள கோட்டத்தை நமன் கோட்டமாக மாற்றி வென்றான்; போர்க்களங்கள் தோறும் இவன் வாகை சூடுதலின் யானைகளையும் குதிரைகளையும் பொன்னையும் பார்த்திபர் சீதனம்போல் நல்கினர். இவனை எதிர்த்துப் பொருத அரசரின் கண்கள் சிவந்தில; தோற்றோடிய வேந்தர் கால்கள் சிவந்தன. விருதராச பயங்கரனான விசயதரன் பிடித்தவேல் சிவந்தது; அவன் கீர்த்தி வெளுத்தது. தனக் கொப்பாரில்லாத வீரனாகிய விசயதரன் பரி ஊர்ந்து வடதிசை மேற்செல்ல, வீரராசேந்திர சோழன் தேவருலகுக்கு அரசனெனும்படி வானுலகம் புகுந்தான். அப்போது சோழ நாட்டில் நடந்த தடுமாற்றங்களைக் கூறுவேம்.

வேதியரது வேள்வியும் அறுதொழிலும் குன்றி, மனுநீதி தடுமாறி, வேதமும் முழங்குத லொழிந்தது. சாதிகள் ஒன்றோடொன்று தலை தடுமாறின. எவரும் தத்தமக்குக் கூறிய ஒழுங்கில் நில்லாது ஒழுங்குகளை மறந்தனர். ஒருவரை ஒருவர் மிஞ்சினர். கடவுளரின் கோயில்கள் பூசையை மறந்தன. பெண்கள் கற்புநெறி தவறினர். அவரவர்க்குரிய கட்டுப்பாடுகளு மழிந்தன. செறிந்த இருள் பரந்த காலை அவ்விருளை ஒட்டுதற்கு ஒலிக்கின்ற கடலிடத்தே உதயமாகும் சூரியனைபோல விசயதரன் வட நாட்டினின்றும் திரும்பிவந்தான். காத்தற் றொழிலுக்குரிய அவனே, படைத்தலையும் கடனாகக்கொண்டு ஒழுக்கங்களிற் குலைந்தோரை முறையிற்கொணர்ந்து உலகை முன்னிருந்த நிலையில் நிறுத்தினான். பரந்த புனலுடைய நான்கு கடல்போல நான்கு வேதங்கள் முழங்கவும், மூவுலகத் துள்ளார் வாழ்த்தவும் முடிசூடிட்டு முழுக்குச் செய்தான். அப்பொழுது, ஒலிக்கின்ற வீரக்கழல் புனைந்த மன்னர் ‘மனு நீதி தலையெடுக்க’ எனக் கூறி அடிமீது அறுகெடுத்து வைத்தனர். மறையவர் சென்னி மீது முடி யெடுத்து வைத்தனர். அரச நீதி திறம்பாத வேந்தன் முடிமீது விதிப்படி சொரிந்த புனலினிடையே அறத்துறைகள் அனைத்தும் வளர்ந்தன; உலகைத் தனக்குச் சொந்தமாகக் கைக்கொண்டு புலிக்கொடி நாட்டுதலும், அன்று முதல் அமரர்க்கு விழாவெடுக்கக் கொடிகள் ஏறின. குவித்த கையோடு அரசர் வலம் வருகின்ற கழலிடத்தே ஒலிக்கின்ற வீரக்கழலணிந்த அபயனது முததுக்கள் தூக்கிய வெண் கொற்றக்குடையின் நிலவெறிக்க, கலியிருள் ஒளித்தது. உலகை விளக்கும் அழகிய வெண் கொற்றக்குடை நிழலில் சிவவெருமான் உறையும்படி மலைகள் சேர்ந்து விளங்கின. வறுமையைக் கழுவி அழகு பெற்று உலவுகின்ற பெரிய புகழாகிய நிலவில் திருமால் பள்ளி கொள்ளும்படி கடல்கள் சேர்ந்து விளங்கின. நான்கு திசைகளும் அவனது குடைநிழலிலடைந்தன. மறைகள் முறைமையில் அடைந்தன. சேரர் பாதங்களில் அடைந்தனர். பாண்டியர் கடலில் மறைந்தனர். கருணை யோடு இரண்டு கரங்களாலும் வாரி இறைக்கும் பொருள், மழை போன்றது. தீக்கடை கோலிற் பிறந்த நெருப்பால் வேட்கப்படும் மந்திர வேள்விகள், மழையை உதவின. கவிஞர் பரிசில் சுமந்தனர்.

எருமைகள் திறைகளைச் சுமந்தன. அரசர் 1பாதங்களைச் சுமந்தனர். புயங்கள் உலகைச் சுமந்தன. விரித்த கூரிய நகங்கள் விளங்குகின்ற கிழப்புலியின் முத்திரையைப் பொறித்த மேருவை அடித்துத் தாழ்த்திய கோலிடத்தே வளை வுண்டு; அவன் செலுத்தும் செங்கோலிடத்து வளைவில்லை. இகல் கொண்டு பொருது வணங்காத அரசர் கால்களிற்றளையும் செய்யுளடிகளில் வரும் தளைகளுமல்லாது வேறொருவர் பாதங்களிலும் தளையில்லையாகும். மடமயில் போன்ற சாயலுடைய மாதரின்சிறியபாதச் சிலம்பொலி விளைக் கின்ற கலா மன்றிப் பகையினால் விளையும் ஆர்ப்பு அந்நாட்டின் ஓரிடத் தும் இல்லையாகும். விளைகின்ற போர் ஒன்றும் இன்மையால் விசயதரன், மற்போரும், புலவர்களின் வாதப்போரும், வலிய யானைப்போருமாகிய இவற்றைக் கண்டும், கலையினோடும், கவிவாணர் கவியினோடும், மனுநீதி முறையினோடும் பொழுது போக்கினான். ஒரு நாள், சோலைகளுக்கு நீர் பாயும் கால்வாய்களுடைய காவிரியாற்றங்கரையில் வேட்டையாடியிருந்த விசயதரன், “பாலாற்றங்கரையில் 1பரிவேட்டையாடுதற்குப் பயணமென்று பறை அறமின்” எனலும் உலகு முழுமையும் ஒரு நகருட் புகுந்தாலொப்பத் திரைவீசுகின்ற கடலொலி அடங்கும்படி நாற்றிசைகளிலும் நான்கு படை களும் திரண்டன. விசயதரன் தனது அழகினால் அணிகள் அழகுறும்படி அவற்றை அணிந்து சோதிடர் ஆராய்ந்து கூறிய சுப முகூர்த்தத்திற் புறப்பட்டான்.

அப்பொழுது, வேதியர் பலர் நின்று புண்ணியதானங்களைப் பெற்ற னர். அடைக்கலம் புகுந்த மன்னர் அபயதானம் பெற்றனர். கவிவாணர் பொன்னோடு மத யானைகளையும் தானமாகப் பெற்றனர். சூரியன் சந்தி ரனைக் குடையாகப் பிடித்து உதயகிரியில் தோன்றினாற்போல் விசயதரன் அழகிய களிறொன்றின்மேல் விளங்கினான். வெண்கொற்றக் குடையின் கீழ் சந்திர விம்பம்போல் கவரிகள் பல இரட்டின. வலம்புரிச் சங்கின் தழங்கு கின்ற குரலோடு பல சங்குகள் முழங்கின. பருவகால முகில்களின் முழக்கம் போல வாத்தியங்கள் குமுறின.

பார்த்திபர், விசயதரனுக்குச் சிறப்புச்செய்ய வந்து கூடுதலால் இடையறாத ஆரவாரமெழுந்தது. மறையவர் நான்மறை ஓதும் முழக்கமும் இவற்றோடு கூடி ஆர்த்தது. இவ்வாறு இடையறாது எழுகின்ற ஆரவாரத்தை மண்ணுலகத்தவரும் விண்ணுலகத்தவரும் கடலொலியோ? என்று அறியாது மயங்கினர். ஏழுலகோடு ஏழிசையும் வளர்த்தற்குரிய விசயதரன் வகுத்த இசையின் மதுரவாரிதி எனலாகும் காதற்றேவி ஏழிசை வல்லபி, யானைமீது பிரியாது உடன் இருந்தாள். அரசர் மனைவியர் பொன்மாலையையும் மலர் மாலையையும் அணிவித்து நின்றேவல் கேட்டுப் பக்கத்தே சூழ்ந்திருப்பப் பட்டத்துத் தேவியாகிய தியாகவல்லி பிடி ஒன்றின்மீது ஏறி வந்தாள். பிடிமீது வரும் வளையணிந்த கையினராகிய மடமாதர் பலரும் பிடிமீதேறி வரும் பிடிக்குலமொத்தனர். பொற்குடை பிடித்துவரும் அரசாளும் வேந்தர், முடிமீது நிரைத்து வரும் முடிகளை ஒத்தனர். யானை மீது வரும் அநேகம் அரசர் யானைமீது வரும் அநேக யானைகளை ஒத்தனர். ஒளிபடைத்து வரும் விடுபடைகள், சேனைமீதொரு சேனை வருவதொத்தன.

பெரிய யானைகள் மீது அதிர்ந்துவரும் பேரிகைகள், முகிலின்மேல் முகில் முழங்கி வருவதொத்தன. முனை நீண்ட கொடிகளின் மேற் படிந்த முகில்கள் துகிலின் மேல் வரும் துகிற் கூட்டமொத்தன. தேரின் மீது வரும் பொன்மேகலை உடுத்த மகளிர், தேரின்மீது வரும் தேரையொத்தனர். பூமியின்மீது இன்னொரு பூமி உள்ளதுபோலப் படலதூளி எழுந்திடையில் மூடிற்று. யானைமீதும் இளம்பிடிகள் மீதும் பொற்றவிசிட்டு இடையறாது நிரைத்துச்செல்லும் கடல்போன்ற சேனை அபயன் இம்முறை சேதுபந்தனஞ் செய்ததொத்தது. நீலமணிகள் நாற்றிய சிவிகை வெள்ளமும் முத்துக் குடை வெள்ளமும், கால்வாய்களாற் பெருகும் யமுனை வெள்ளத்தை ஒத்தன. மீன், பாம்பு, கலுழன், யானை, பன்றி, ஆளி, குதிரை, மேழி, கோழி, வில் முதலிய ஆயிரங் கொடிகள் அசைந்தன. கடிய சினப்புலிக் கொடிகள் அவற்றின் மேலாக விளங்கின. மாலை அணிந்த கழுத்துகளும், பூச்சூடின கூந்தலும், மிருது வான நடையும், இனிய மொழியும், என்றும் ஒப்பில்லாத நகையுமுடைய மகளிர் கூட்டங்கள் எவ்விடத்தும் பரந்து சென்றன. அப் பெண்களின் தோற்றம், 1மெல்லிய கதலிகளும், பச்சைக் கமுகும், பொங்கும் இளநீர்க் குலைகளும் ஆற்றிடத்து எழுஞ் சுழிகளும், அன்னநடையும், ஆலை யிடத்துக் கமழ்கின்ற பாகும் எவ்விடத்தும் பரந்து, வேறுமொரு பொன்னி வள நாடு சயதுங்கன்முன் நின்றது போன்றது. எங்கும் நெருங்கிச் செல்லும் வேழ நிரைகளாகிய மலைகளோடு செல்லும் வெற்றிவேல் அபயன், தனது அருளைப்பெற்று வாழ்தலால் அபயம் புகுந்த சேரனோடு கூட மலைநாடு காணச்சென்றவன் போன்றான். அவ்வானைகளாகிய மலைக்கூட்டங்கள் துதிக்கைகளினாற் றெறிக்கும் நுண்ணிய நீர்த்திவலை, பாண்டியர் அத் திக்கில் அஞ்சி விட்டோடிய முத்தை வாரிக்கொண்டு தென்றற்காற்று வருவதை ஒத்தது.

இவ்வகை ஆடம்பரங்களோடு புறப்பட்ட விசயதரன் தென்திசையி னின்றும் வடக்கு முகமாகத் திரும்பிச் சிதம்பரத்துக்குச் சென்று சிவபெரு மானைத் தரிசித்து, அவரருளைப் பெற்றுக்கொண்டு அதிகைமாநகரை அடைந்தான். பின் அதிகையினின்றும் பயணப்பட்டு வேட்டையாடி வட்டமதி ஒத்த குடையுடைய மன்னர் தொழ வளம் பொருந்திய கச்சிநகர் அடைந்தான்.

இவ்வாறு இதந்தரும் வரலாற்றை இறைவி சொல்லிக் கொண்டிருக் கும்போது போர்க்களத்தினின்றும் ஒரு பேய் கால்பிற்பட மனத்து உவகை தள்ளிவர ஓடி வந்தது. வந்து கலிங்கரது இரத்தம் வெள்ளம், வெள்ளமா யோடுகின்றது. கலிங்கதேசத்துக்கு, அவசரம், அவசரமாகச் செல்லுங்கள்; சென்று மெலிந்த உடலை நிரப்புங்கள்! நிரப்புங்கள்!! தேவியின் கணங்களே! ஏன் இங்கிருக்கின்றீர்கள். இதற்குமுன்னே வலிய சிறகுடைய கழுதினதும் பருத்தினதும் வயிறுகள் பீறிப்போயின; அங்குள்ள பிணங்களை உண்ப தற்கு உங்கள் வயிறுகளும் போதா; என்றாலும் எல்லோரும் திரண்டு ஓடிச் செல்லுங்கள்; சிரமலைகளை மேலும் மேலும் விழுங்கவும், திரை எழுகின்ற இரத்தக் கடலைக் குடிக்கவும் பிரமனை வேண்டி இன்னும் பெரும் பசியைப் பெறுங்கள்” என்றது.
இவ்வாறு கூறக் கேட்ட பேய்கள், கொழுத்த பிணம் தின்றனபோல் உடல் பூரித்துச் சிரித்து ஒன்றின்மேல் ஒன்று விழுந்தன. மகிழ்தற்குரிய கலிங்கப்போரை அறிவித்த பேயின் வாயை ஓடி ஓடி முத்தமிட்டன. சாவேம் என்ற பேய்களின் பற்களைத் தகருங்கள் என்றன. ஒக்கலைப் பிள்ளை விழவிழப் பெருந்துணங்கை ஆடின; வள்ளைப் பாட்டுப்பாடி ஆடச் சில பேய்களை அழைத்தன; கனாவுரைத்த பேயைக் கழுத்தினிற் கொண்டு, அரைப்பட்டி பூண்ட நந்தேவி வாழ்க! வாழ்க!! என்று ஆடின. இவ்வாறு துள்ளிக் குதித்து ஆடல் புரியும் பேய்களின் ஆடலைத் தேவி தவிர்த்தாள்; தவிர்த்துப் போர்க்களத்தினின்றும் வந்த பேயை நோக்கி, “அப்போர் நிகழ்ந்த வகையைக் கூறு” என அப்பேய் கூறுகின்றது.
காளிக்குக் கூளிகூறியது
தேவீ! யானைகள் ஆயிரம் படக் கலிங்கர் மடிந்த களப்போர் உரைப் போர்க்கு நாவாயிரமும் கேட்போர்க்கு நாளாயிரமும் வேண்டும்; இதனை, ஒருவர்க்கு ஒருவர் ஒரு நாவினாற் கூற முடியாதெனினும் சிறியேன் விண்ணப்பஞ் செய்கின்றேன்; கேட்டருள். முன்னொரு நாள், பாரெல்லாம் உடைய அபயனது செந்தாமரை மலரொத்த கொடைக்கை நிகரென மேகம் இருண்டு காஞ்சி நகரிடத்து ஏழரை நாழிகை பொன்மழை பெய்தது. அந் நகரிடத்து, அழகிய பொன்மயமான மேரு இதுவோ அன்றி அதுவோ என்று, வலம் வருவதற்குச் சூரியன் சந்தேக முறுகின்ற இராச மாளிகையின் தென்மேற்கு மூலையில் சித்திர மண்டபமொன்றுண்டு. அதன் நடுவே, மொய்த்து விளங்குகின்ற தாரகைகளுக்கு நடுவிலெழுந்த பூரண சந்திரனுக்கு ஒப்பென, அழகுபெற்று விளங்கிய முத்துப் பந்தரின் நடுவே சந்திரவட்டக் குடை ஒன்று நிழற்செய்யா நின்றது. அதன்கீழ் வீசுகின்ற வெண்சாமரைகள், திருப்பாற்கடலின் இரண்டு திரைகள் வந்து பணி செய்வது போன்றன; அவற்றின் இடையே இடனகன்ற உலகம் முழுவதையும் புயத்தில் வைத்து மேருவிற் புலிக்குறி பொறித்த விசயதரன் சிங்காசனத்திலிருப்பதோர் சிங்கமென விளங்கினான். பாம்பின் படத்திற்றங்குன்ற பூமிக்கு நாயகனும், நாவிற் பல கலைகள் உறையப் பெற்றவனுமாகிய விசயதரனது மணிக ளழுத்திய பணிகள் பூண்ட புயத்தே சிங்கவாகனி வந்து இலக்குமியோடு அமர்ந்தாள். கற்பகதரு நாணும்படி பொன்னைப் பிறர்க்குத் தானமாகப் பொழிகின்றன ஆகிய தன் புயத்தைவிட்டு நீங்காத வீரமாதும் திருமாதும் போலப் பெரும் புண்ணியஞ் செய்த தியாகவல்லியும் ஏழிசை வல்லபியும் ஆகிய தேவியர் சேவித்திருந்தனர். நாடகாதி நிருத்தம் அனைத்தும் 2நால் வகைப் பெரும்பண் என்று சொல்லப்பட்ட ஆடல் பாடல்களிற் சிறந்த அரம்பயரை ஒத்த பெண்களநேகர் பக்கத்தே நின்றனர். நின்றேத்துவாரும், இருந்தேத்துவாரும், தூயமங்கலம் பாடுவாரும் ‘நின்பாதத்தில் வீழ்ந்து வணங்கிய அரசருக்கெல்லாம் பசும் பொன் முடி’ எனப் புகழ்ந்து பாடினர். வீணை, யாழ், குழல், மத்தளம் முதலியன வல்லோர், “இவை வேறு வேறு நூறு விதம்படக் காணலாம் வகை யாம் கற்றறிந்துள்ளேம் இவற்றை நீ கண் டருளல்வேண்டு” மெனக் கூறிப் பாதங்களிற் பணிந்து நின்றனர். தாளமும் இசையும் பிழையா வகை தான் வகுத்த பாடல்களைத் தன்னெதிரிற் பாடிச் சின்னமும் களிறும் பெறும்பாணரின் கல்வியிற் பிழைகண்டு 1கேட்டிருந் தான். அழகிய யானையைவிட்டு இழிந்துவந்து அடியில் வீழ்ந்த மன்னர் முதுகுகாட்டிச் செல்லாது தமது பொற்குடை சாமரை என்றிவற்றைத் தங் கரத்தாற் பணிமாறினர். பாண்டியராதி அரசபத்தினிகளைச் சேடியராக வுடைய தன் தேவிமாருடன் விசயதரன் இந்திரனைப்போற் கொலுவிருந் தான். குறுநில மன்னரும் நெடுநில வேந்தரும் வந்து வணங்கும் வாயி லிடத்து வண்டை மன்னனாகிய தொண்டைமான் முதலிய மந்திரி பாரகர் சூழ்ந்து நின்றனர். அத்தருணத்துத் 3திருமந்திர ஓலை நாயகன் அரசன் முன்போந்து வணங்கி, “வேந்தர்பெரும! வேந்தர், தம் திறையைச் செலுத்து வதற்கு வாயிற்புறத்தே நிற்கின்றனர்” எனக் கூறி நின்று, நோக்கினால் அவன் குறிப்பறிந்து அவர்களை உள்ளே புகுத்தினான்.

“தென்னவர் வில்லவர் கூவகர்
சாவகர் சேதிபர் யாதவரே
கன்னடர் பல்லவர் கைதவர்
காடவர் காரிபர் கோசலரே.”

“கங்கர் கடாரர் பவிந்தர்
துமிந்தர் கடம்பர் துளும்பர்களே
வங்க ரிலாடர் மராடர்
விராடர் மயிந்தர் சயிந்தர்களே.”

“சிங்களர் வங்களர் சேகுணர்
சேவணர் சீயண ரையணரே
கொங்கணர் கொங்கர் குலிங்க
ரவந்தியர் குச்சரர் கச்சியரே.”

“வத்தவா மத்திரர் மாளுவர்
மாகதர் மச்சர் மிலேச்சர்களே
குத்திரர் குத்தர் குடக்கர்
பிடக்கர் குருக்கர் துருக்கர்களே.”

என்னும் பல தேசத்து அரசர்களெல்லாம், “செயதுங்கனே! நீ எமக்கு அருள் செய்த நாடு நகர்களின் பொருட்டாக இடப்பணித்த திறைகளை எல்லாம் சொன்னபடி தவறாது கொணர்ந்தனம்: ஏற்றருள்க” எனப் புகன்று கூப்பிய கரங்களோடு பாதத்தில் வீழ்ந்து வணங்கினர்; வணங்கி,

“ஆரமிவை யிவை பொற்கல மானை யிவையிவை யொட்டக
மாடலயமிவை மற்றிவையாதி முடியொடு பெட்டக
மீரமுடையன நித்திலமேறு நவமணி கட்டிய
வேகவடமிவை மற்றிவை யாதும் விலையில் பதக்கமே.”

“இவையு மிவையும் மணித்திரளினைய வினைய தனக்குவை
இருளும் வெயிலு மெறித்திட விலகுமிவை மகரக்குழை
யுவையு முவையு மிலக்கணமுடைய பிடியுவை 1புட்பக
முயர்செய் கொடியிவை மற்றிவை யுரிமை யரிவையர் பட்டமே.”

எனக் கூறித் தாங்கொணர்ந்த கப்பங்களை எல்லாம் கொண்டு முன் நின்றனர். திறை செலுத்திய அரசருட் சிலர், “இந்நூறு கரிகளும் ஏறிச்செலற்கு வந்தன. இவ்வியானைகளுக்கு நிகராக வேறு அரசர் ஓர் ஆனை தருவ ரெனில் எமது நாட்டை அவருக் களிக்க இசைவோம்” எனத் தனித்தனி தம் வாழ்வு கருதிக் கூறி நின்றனர். திறைசெலுத்திப் பணிந்த அரசரின் சிரங்கள் மீது விசயதரன் தன் இருபாதங்களையும் வைத்து “அஞ்சேல்” என்று அபய மளித்தான்; அளித்து, “இங்கு திறைகொடுத்து நின்றவர்களொழிய திறை கொடுக்கத் தவறியவர்களுமுண்டோ?” எனத் திருமந்திர ஓலை நாயகனை வினாவலும், அவன் “வேத்தர் பெரும! தத்தந் திறைகளுடன் வந்து ஏனை வேந்தரெல்லாம் தாள் நிழல் வணங்கினராயினும், கலிங்க அரசனாகிய அனந்த வன்மன் என்பவன் மட்டும் உரிய திறையோடும் இருமுறையாக வந்திலன்” என்றான். அதனைக் கேட்டதும் விசயதரன் முகத்திற் புன்முறு வல் அரும்பியதே யன்றிச் சிறிதும் கோபக் குறிதோன்றியதில்லை. வந்து நின்ற ஏனை மன்னர்கள், “இனி நிகழ்வது யாதோ?” என உடல் குலைந்து நடுநடுங்கலாயினர். அப்போது, சோழன், தன் படைத்தலைவரை நோக்கிக் “கலிங்கர்பதி படை வலியற்றதாயினும் அவன் குன்றரண் பெருவலிமை கொண்டது. அதனால் நம் யானைப் படையுடன் நீவீர் சென்று கலிங்கனைப் பிடித்து வருதிர்” என்று கட்டளை யிட்டனன். இவ்வாறு அரசன் மொழிதலும் வேதங்களைக் கூறிய பிரமாவின் மரபில் வந்த பல்லவ குலதிலகனும் வண்டை நகர்க்கரசனும், விசயதரனது மதிமந்திரியும், தலைமைச் சேனாபதி யுமாகிய கருணாகரத்தொண்டைமான் எழுந்தடி வணங்கி, “வேந்தர் வேந்தே! யானே படை எடுத்துச் சென்று ஏழு கலிங்கங்களையும் அழித்து வருவேன்” என்று கூறினான். இங்ஙனம் கூறி விரைந்து பகை அழிக்கும் விருப்புடன் அவன் அரசன்பால் விடைகேட்க அவனும் அங்ஙனமே செய்க என விடை கொடுத்தருளினான்.

படையெழுச்சி
கடலைக் கலக்குவதோ, மலையை இடிப்பதோ, கடிய விடமும் பொறியுமுடைய ஆதிசேடனின் பிடரியை முறிப்பதோ, இப்படையின் நினைவு எனும்படி நால்வகைப் படையும் பிரளயம் போற்றிரண்டன. வளை, முரசு, வயிர் முதலிய பல்லியங்கள் ஆர்த்தன; சாமரைகள் இரட்டின; குடைகள் நிரைத்தன; மயிற்பீலிக்குடைகள் நெருங்கின; கொடிகள் பரந்தன. இவை ஒருமித்துச்சென்று நிழல் செய்தலின் பூமி குளிர்ந்த நாற்சந்தியை ஒத்தது. கொடி, குடை முதலியன நிரைத்தலின் சூரியன் மறைந்து பூமியில் இருள் கவிந்தது. எண்ணில்லாத பரிசைகள் தழலெழ மின்னுதலாலும் அரிய பொன்னாபரணங்கள் கனல்போல் விளங்குதலாலும், விளங்குகின்ற படைக் கலங்கள் ஒளிவிடுதலாலும், அவ்விருள் ஓடி மறைந்தது; ஒளி பரந்தது.

“அகில வெற்புமின்றானை யானவோ
வடைய மாருதம் புரவியானவோ
முகில னைத்துமத் தேர்க ளானவோ
மூரிவேலை போர் வீர ரானவோ.”

“பார்சி றுத்தலிற் படை பெருத்ததோ
படைபெ ருத்தலிற் பார்சி றுத்ததோ
நேர்செ றுத்தவர்க் கரிது நிற்பிட
நெடுவி சும்பலா லிடமு மில்லையே.”

என மண்ணுள்ளோரும் விண்ணுள்ளோரும் எடுத்து மொழிந்து அதி சயித்து மனம் நடுக்குற வான்மறைத்த நாற்றிசைகள் எங்கும் நால்வகைப் படைகளும் திரண்டு பரந்து நின்றன. கடல்களைச் சொரியும் மலையுள வெனும்படி யானைகள் 1சுவடுகளினின்றும் மதம் பொழிந்தன; நெருப்பை உமிழும் முகில்கள் உளவென விழிகளிற் சினக்கனல் சிந்தின; யானை களோடு பரிகளின் உடலையும் பிளக்கும் சில பிறைகள் உண்டெனும்படி உயர்ந்த மருப்போடு விளங்கின. உலகை நிலைகுலைக்கும்படி முழங்கும் வடவை உண்டென அவை நெருங்கி முழங்கின.

குதிரைகள் எதிர்த்தவர் முடியினை இடறுவ; முடியின் முத்தினைப் புகழின் விளைவென நிலத்திற் சிந்துவ; நிலத்திலெழும் பூதூளி அற முகிலை மிதிப்பன; முகில்விடுகின்ற துளியோடு, ஒலிக்கின்ற கடற்றிரையென விரை வொடு கடல் சூழ்ந்த நிலத்தை வலமிடமாக வருவன; கடலிடத்து விழும் இடியென அடியெடுத்து வைக்கும் கதியின. இவ்வாறான குதிரைப் படைகள் வேகத்தோடு சென்றன. இரதங்கள் பெரிய நிலத்தின் திடர்களை உடைக்கும் உருளின; இரு புறத்துஞ் சிறகுடையன; போர்முனையில் எதிரே பறந்து செல்லும் செலவின; நுகத்திற் பூட்டிய குதிரைகள் வேகத்தோடு முன்னே செல்லும் செலவின. அது தமக்கு அவமான மென்னும் 1ஒரு நினைப்பின. 2கொடிஞ்சித் தாமரை மலர்போல் மலராதிருத்தற்குப் போர்க்களத்துள்ள இரத்தத்தை வாரி இறைப்பன; உலகை அளப்பன; இவ்வியல்பினவாகிய தேர்கள் பரந்து சென்றன.

காலாட்கள் அளவிடவரிய வெற்றியும் உரிமையும் இவையெனப் பிறர் அறிய அவயவத்திலெழுதிய அறிகுறி அவை என, உடம்பில் பல ஆயுதங்கள் பட்ட நிரைத்த தழும்புகளுடையர். தேவருலகோடு இவ்வுலகம் கிடைப்பதாயினும் பின் அடி எடுத்து வையாத கோட்பாட்டினர்; உடல் எமக்கொரு சுமை என்னும் சினத்தினர். உயிரை விற்றுப் புகழ்கொள்ள விழைபவர்.

இவ்வாறு ஒருவரை ஒத்த பல வீரர் நெருங்கிச் சென்றனர். கண்ணிற் கோபத்தீ எழ விழித்த விருதர்கள் வெகுண்டு வெடிசிரிப்புச் சிரித்து அதட்டியபொழுது இமயவர் திடுக்கிட்டனர்; திக்கியானைகள் திடுக்கிட்டன. உகமுடிவில் எழுந்த கடலின் பெருக்கு இது எனும்படியான பரிகள் முகிலின் முழக்கத்திலும் மேலாகக் கனைத்து முகத்தினின்றும் சிந்தும் நுரை, கங்காநதியிடத்து எழும் நுரைபோன்றது.

கட்டுத்தறியைக் கோபிக்கின்ற சினமும், பெரிய கன்னத்தே சொரிகின்ற மதமும், நிலத்திற் பொறுத்த அடியுமுடையவாய் நிலத்தைச் சீய்த்து வருகின்ற முகில் போன்ற யானைகளின் முழக்கில் அலை எழுகின்ற கடல் நீரைக் குடித்த முகில்களும் பிளந்தன.
கடிய விசையுடைய உருள் தொடுத்து உலகை ஒரு கணத்தில் வலம்வரும் அளவிடற்கரிய தேர்களின் மீது எடுத்த கொடிகள் திக்கு யானைகளின் மதமீதிருக்கும் வண்டுகளை எழுப்பின.

இவ்வாறு சேனைகள் எழுந்தன; எழுதலும் பூமியின் முதுகு நெளிந்தது; காடுகள் விழுந்தன; நதிகள் வெறுந்தரையாகச் சுவறி உலர்ந்தன; நான்கு திசைகளும் அதிர்ந்தன; ஏழு கடல்களும் அடங்கின; பெரிய மலைகள் பொடிந்தன. பூதூளி எழுந்தது; நிலத்தே எழும் தூளியைப் பருகி வானின் வயிறு நிறைந்தது; வலமாக எழுகின்ற முகில் நிரைகள் நீர்சுவறி வறந்தன; விளங்குகின்ற நெற்றிப்பட்ட மணிந்த மலைகள் சொரியும் மத வெள்ளத்தினாலும், குதிரைவாயினின்று சிந்தும் நுரையினாலும் பூதூளி அடங்கிற்று; ஏகும் திசையை உதயத்தே அறிந்து, எழுகின்ற பூதூளி அடங் கும்படி நடந்து, மீளச் சூரியன் அத்தகிரியில் மறையும்போது செல்லுதல் ஒழிந்து, எப்பொழுதுஞ் சென்றனர். இவ்வாறு செல்லுதற்குத் தண்ணிய மலர் மாலை யணிந்த உபசேனாபதிகளோடு, அபயனது படைகள் எல்லாவற் றுக்கும் கண்போன்றவனும், சோழன் சக்கரமாகியவனுமாகிய கருணாகரன் யானை இவர்ந்தான். தொண்டையர்க்கரசனும் காமதேனுவின் வழியில் வந்த பரிசுத்தமான வெள்ளிய இடபக்கொடி உடையவனும், வண்டையர்க் கரசனும், பல்லவர்க்கரசனுமாகிய கருணாகரத் தொண்டைமான் களிற்றின் மீது ஏறுதலும், வெற்றிகொண்டு அரசர் யானையைக் கவர வாணர்கோ வரையன் ஒரு யானை மீதேறினான் பகைவர் தூசிப்படையை வாளால் வென்று முடிகொண்டவனாகிய முடிகொண்ட சோழனும் ஒரு முகபாடம் போர்த்த களிறூர்ந்தான்.

எவ்வரசரும் புறங்கொடுத்தோடி மடிகவென்று வரும், வருத்துகின்ற பல்லவர்கோனும் சோழனும் ஒளிவிட்டு விளங்கும் நெற்றிப்பட்ட மணிந்த களிற்றின்மீது ஏறி இரை வேட்ட பெரும்புலிபோல் இகல்மேற் சென்றனர். அப்பெரும்படை பாலாறு, குசைத்தலை, பொன்முகரி, பழைய ஆறு படர்ந்து எழுகின்ற கொல்லி ஆறு, நான்கு ஆறுகள் சேர்ந்து அகன்ற பெண்ணை யாறு முதலியவற்றைக் கடந்தது; வயலாறு புகுந்து மணிபோன்ற நீர்பாயும் மண்ணாறு. வளம்பொருந்திய குன்றியாறு, பரந்து நிறைந்துவரும் பேராறு ஆகியவற்றைக் கடந்து, அவை பின்னே கழியக் கோதாவரியோடு குளிர்ந்த நீர் ஓடும் வளம்பொருந்திய கம்பை, சந்தநதி, கோதமை என்னும் நதிகளைத் தாண்டி, உகமுடிவிற் பெருகிவருகின்ற கடலையொத்துக் கலிங்க நாட்டினுட் புகுந்தது.

வீரர், தங்கள் வரவை அறிவிப்பவர்போல நாடெங்குந் தீக்கொளுவிச் சூறையாடினர். கங்காநதி ஒரு புறமாகக் கிடக்கக் கடல்போற் படைவந்தது; “படைவந்தால் எங்கே புகுவது? அரண் இனி எங்கே? இனி எமது விதியாதோ? என்று குடிகள் கலங்கின, மதில்கள் இடிகின்றன; வீடுகள் எரிகின்றன; பொழில்களெல்லாம் புகை எழுகின்றது; மடிகின்றேம்; பகை என்று படைகள் வளைகின்றன” என்று துடித்தன. துடித்து அப்படைகளின் கொடுமைக்கு ஆற்றாத மக்கள் அரையிற் றுகிலுரியும்படி கலிங்கவேந்தன் பால் ஓடிச்சென்று, அவன் பாதங்களில் அடியற்ற மரம்போல் வீழ்ந்து உரை குழறவும், உடல்பதறவும், “வேந்தே ! உலகைத் தனி ஆழி செலுத்துகின்ற அபயனுக்கு இடுதிறையைச் சொன்னபடி கொடாது தவறியதே இப்படைகள் வருதற்குக் காரணம். இவை அபயன் ஏவிய படைகளாகும். யாம் கூறியவற்றை முன்னமே நினைந்தாயில்லை. இப்போது நமக்கு இவ்வகைத் துன்பம் நேர்ந்தது” என ஒருவர்போற் பலரும் கூறி நின்றனர்.

“உலகுக் கொருமுத லபயற் கிடுதிறை
யுரைதப் பியதெம தரசேயெம்
பலகற் பனைகளை நினைவுற் றிலைவரு
படைமற் றவன்விடு படையென்றே.”

“உரையிற் குழறியு முடலிற் பதறியு
மொருவர்க் கொருவர்முன் முறையிட்டே
யரையிற் றுகில்விழ வடையச் சனபதி
யடியிற் புகவிழு பொழுதத்தே.”

பயம் என்பதை அறியாத வடகலிங்கர் வேந்தனான அனந்த பன்மன் இதனைச் செவிக்கொள்ளுதலும், வெவ்விய தறுகண் வெகுளியினால் நெட்டுயிர்த்துக் கைகொட்டி வியர்த்து எரிபறக்க நோக்கி, “வண்டுகளுக்கும் மதத்தை உண்ணக் கொடுக்கும் திக்கு யானைகளைப்போன்று அளிக்கின்ற கவிந்த மலர்க்கரமுடைய அபயற்கன்றி அவன் தண்டினுக்கும் யான் எளி யனோ?” எனக் கூறி வெகுண்டு விசாலித்த புயங்கள் குலுங்க நகைத்தான். நகைத்துக் காடு, மலை, கடல் ஆகிய அரண்களைக் கலிங்கர்நாடு சூழ்ந்து கிடக்கின்றதென்பதை அறியாது அச்சோழன் தண்டு வந்தது போலும்” என மொழிந்தான்; மொழிதலும் அவன் மந்திரிகளுள் ஒருவ னாகிய எங்கராயன் எழுந்து, “அரசே! அரசர் கோபிப்பராயினும் அடியவர் அவருக்குறுதி கூறாதிரார். ஏனை வேந்தரை வெல்லச் சயதரன் தானை அல்லது அவன் வருதலும் வேண்டுமோ? அவன் ஏவிய தண்டின்முன் பாண்டியர் ஐவர் கெட்ட கேட்டினை நீ கேட்டிலைபோலும்; பொருதற்குப் படை வருதலும் புறங்கொடுத்தோடிய சேரரின் செய்தியைக் கேட்டிலையோ;

கடலிற் சென்று விழிஞத்தை அழித்துச் சாலையைக் கொண்டதும் தண்டுகொண்டன்றோ; சோழன் படை பகைத்து எழுந்து வந்து இடிபட்டதும் இம்முறையன்றோ; அவன் பகையோடு பொர எழுந்த சளுக்கியர் படை அளத்திற்பட்ட பாட்டை அறிந்திலையோ; அவனது தண்டத் தலைவர் நவிலையைத் தாக்கி அவர்கள் ஆயிரம் யானைகளைக் கொண்டனரன்றோ; இன்னும் வேந்தர் பலரைப் பலவிடங்களிலும் அபயன் வென்றது தான் சென்றன்றித் தன் தண்டைக் கொண்டன்றோ? அவனது சக்கரமாகிய கருணாகரனைத் தலை மையாகக் கொண்டு, அவன் சேனை நம்மைத் தாக்க வருகின்றது, இப்போது நீ என்னைச் சினக்கக்கூடுமாயினும், அவன் சேனைமுன் நாளை நிற்கும் போது யான் கூறியதன் உண்மையை நீ அறிவாய்,”

எனக் கூறி முடித்தான். கலிங்க வேந்தன் அவ்வார்த்தைகளைக் கேட்கப்பெறாது தன்னமைச்சனை நோக்கி, “எனக்கு எதிர்வார்த்தை கூற இமையோரும் நடுங்குவர். குன்றனைய எனது புயங்கள் நெடுநாட்களாகப் போர் பெறாது மெலிந்திருப்பதை நீ கண்டிலையோ? நீ உறுதி கூறுவதிற் பிழைத்தாய்; எனக்கு உறுதி கூறுவது நின்பெருமை கெடவோ? சிறிய கண்ணுடைய சிங்கக் குட்டியை எதிர்த்தல் எளிதென்று நினைத்து யானை அதனைக் கிட்டி எதிர்க்க வருமோ? எனது தோள்வலி வாள்வலி ஆகியவற்றைச் சிறிது மறியாதார்போல அறியாமை யினால் இவ்வாறுரைத்தாய். நினைப்பளவில் அப்படையை வெல்வ தரிதோ?” எனக்கூறி, “யானை, குதிரை, தேர், காலாள் முதலிய எனது நாற் படைகளும் பாடிவீடு கொண்டிருக்கும் சோழனது படை எதிரிற் சென்று அமர் தொடங்குக,” என ஆணை கொடுத்தான்.

‘போர் யானைகளையும், குதிரைகளையும், எண்ணில்லாத தேர்களை யும் கடாவிக் காலாட்களும் செருக்களத்தே செல்க; இனி நமக்குப் போர் கிடைத்தது,’ என்று கலிங்கத்தே பேரொலி எழுந்தது. ஏழு கலிங்கத்தும் எழுந்த பெரிய ஆரவாரம், முழங்குகின்ற கடலேழும் ஒரே காலத்துப் பொங்கி எழுந்தது போன்றது. மதம் பாயும் துளைகளையுடைய மத மலைகள் கடல் நீருண்ட மேகம் போற் பிளிறின. வளைந்த முகத்தின் நுரை சிந்தப் பாய்ந்து வருகின்ற துரகங்கள் கடலில் மறித்தடிக்கும் திரைகள் போன்றன.பரிகள் விசையோடு இழுத்துச் செல்லும் தேர்கள் அத் திரைகள் மீது ஓடும் தோணிகள் போன்றன. ஒலிக்கும் வீரக் கழல் கட்டிய வயவரின் முறுகிய கோப அனல் அக்கடலிடத்தே மடுத்தெரியும் ஊழித் தீ போன்றது. புகழ்விரும்பித் தம் உயிரைத் திரணமென மதிக்கும் அவ்வீரர், கடலிடத்தே உழுது திரியும் சுறாமீன்கள் போன்றனர். அரசர் இடையிடையே பிடிக்கின்ற குடைகளும், இரட்டுகின்ற கவரியும் திரையின் தலையில் தோன்றும் நுரைபோன்றன. நெருங்கிப் பிறழுங் கொடிகள் கடலிடத்தே விளையாடும் கயல்மீன்கள் போன்றன. வேற்படைகளி னலகினோடு அலகு பட்டுக் கலகல என எழும் ஒலி, அறைகின்ற திரைகளின் ஒலிபோன்றது. இங்ஙனம், உலகைப் பருகும் ஒரு கடல் எனும்படி கலிங்கர் படை எழுந்தது. ஒருவர் உடல் ஒருவர் உடலிற் புகும்படி வீரர் நெருங்கினர். காண்போர் அஞ்சும்படி நெருங்கிச் செல்லும் படையின் நடுவில் ஒரு விரலிட வெளியரிது. இடை வெளியின்றி நெருங்கிச் சென்ற கலிங்கர் படை அணிவகுத்துக் கருணா கரனது படையினெதிரே புலி நிரைகளைப் போல் வலிமையோடு நிரைத்து நின்றன; நின்று படைக்கலங்களை எடும் எடும் என்று ஆர்த்தன.

போர்
எடுமெடு மெடுமென வெடுத்ததோ
ரிகலொலி கடலொலி யிகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம்
விடும்விடு மெனுமொலி மிகைக்கவே.

வெருவர வரிசிலை தெறித்தநாண்
விசைபடு திசைமுகம் வெடிக்கவே
செருவிடை யிளையவர் தெழித்ததோர்
தெழியுல குகள் செவி டெடுக்கவே.

எறிகட லொடுகடல் கிடைத்தபோ
லிருபடை களுமெதிர் கிடைக்கவே
மறிதிரை யொடுநிரை மலைத்தபோல்
வருபரி யொடுபரி மலைக்கவே.

கனவரை யொடுவரை முனைத்தபோற்
கடகரி யொடுகரி முனைக்கவே
யினமுகி லொடுமுகி லெதிர்த்தபோ
லிரதமு மிரதமு மெதிர்க்கவே.

பொருபுலி புலியொடு சிலைத்தபோற்
பொருபட ரொடுபடர் சிலைக்கவே
யரியினொ டரியின மடர்ப்பபோ
லரசரு மரசரு மடர்க்கவே.

விளைகனல் விழிகளின் முளைக்கவே
மினலொளி கனலிடை பிறக்கவே
வளைசிலை யுருமென விடிக்கவே
வடிகணை நெடுமழை சிறக்கவே.
குருதியி னதிவெளி பரக்கவே
குடர்நிரை நுரையென மிதக்கவே
கரிதுணி படுமுட லடுக்கியே
கரையென விருபுடை கிடக்கவே.

படை எடும் எடும் என எழுந்த ஓசை கடலொலியைக் கடந்தது. பரி களை விடும் விடும், யானைகளை விடும் விடும் என இருதிறப் படைகளும் கூவுமோசை மிகுந்தது. வரிந்து கட்டிய வில்லின் நாணை அச்சந்தரும்படி தெறிக்கு மோசையால் திசாமுகங்கள் வெடித்தன. இருதிற வீரர்களும் அதட்டும் அதட்டுகள் உலகைச் செவிடுபடுத்தின. திரை எறிகின்ற கடலெதிரிற் கடல் கிடந்தது போல் இரு படைகளும் கிடந்தன. திரையோடு திரை எதிர்த்ததுபோல் பரியொடு பரி பொருதின. மலையோடு மலை மலைவதுபோல் மத யானைகள் மலைந்தன. முகிற் கூட்டத்தோடு முகிற் கூட்டம் எதிர்ப்பதுபோல் இரதமு மிரதமு மெதிர்த்தன. வலிய புலியொடு புலி எதிர்த்தல் போல் வீரரொடு வீரர் எதிர்த்தனர். சிங்கத்தோடு சிங்கம் எதிர்த்தல்போல் அரசருமரு மெதிர்த்தனர். இருபடை வீரரின் கண்களிலும் தீப்பொறி பறந்தன. அத்தீயினின்றும் மின்னலொளி பிறந்தது. வளைந்த சிலைகள் இடியென இடித்தன. கூர்ங்கணைகள் நீண்ட மழையெனப் பொழிந்தன. இரத்த ஆறுகள் பெருகின. குடர் நிரைகள் நுரையென மிதந்தன; அவ்வாற்றி னிருமருங்கும் கரைபோல் துணியுண்ட யானைப்பிணங்கள் அடுக்கிக் கிடந்தன.

இவை மலைகளெனும்படி மருப்பொடு மருப்பு முட்டி எதிர்த்துப் பொரும் களிறுகளின் கொம்பிடையே நெருப்பொடு பொறிகள் எழுந்தன. அப்பொறிகள் நிழற்செய்யும் கொடிகளைக் கதுவின. அழற் கதுவுதலின் விரைவிலழிந்த கொடிச் சீலைகள், நினைப்பவர் நினைப்பதன்முன் நாட்டிய புதுக்கொடிபோல் புகைக்கொடிகளை எடுத்தன.

மதம் பாயும் சுவடுகளுள் விட்டு உழுது கறுப்பேறிய யானைகளின் மருப்புகள், இடத்தும் வலத்தும் உள்ள கைகள் போன்றன. கரத்தோடு கரம் எதிர்தெற்றி வலிக்கும் யானை களின் கைகள் மருப்புடைய மலைகளிரண்டைப் பிணைக்க மூங்கிலை முறுக்கித் திரித்த கயிற்றை ஒத்தன. களத்தே பாய்ந்து செல்கின்ற குதிரை களின் முகத்திற், கடிய காற்றோடு கூடி உகமுடிவில் சுடர்விட்டெழுந்து உலகை உண்ணும் வடவைக் கனலை ஒத்த தீ எழுந்தது. சில வீரர் களத்தே வருகின்ற குதிரைகளை எதிராது, யானைகளின் மருப்புகளுக் கெதிரே மார்பைக் கொடுத்து நின்றனர். யானைகளின் மருப்பை எறிபடைபோன்று மார்பில் ஏற்ற வீரர் மார்பின் தழும்புகள், சயமாது செய்த அடையாளங்கள் போன்றன. சில வீரர் “இவை சயமாது மார்பில் அணியத் தகுந்த முத்துக்கள்” என்று கூறி அவை உதிரும்படி யானையின் மத்தகங்களை வாளால் வெட்டினர். களத்து யானைப் பிணங்கள் நிரைத்துக்கிடந்தன; படைகள் செருக்களத்தே அலை என நிரை நிரையே நின்றன. ஒப்பில்லாத விற்படை அக்கினிச்சட்டி போன்று எரியும் நெருப்புடைமையின்1, எரி கின்ற மூங்கில் வனத்தை ஒத்தது. தழல்பட்ட மூங்கில் வனம் எப்படியோ அப்படிச் சடசட என்னும் ஓசை எழவும், அம்புகள் தழலோடு புகையைக் கக்கவும், சிலர் வில்லிடத்து ஓயாது அம்பைத் தொடுத்து நாணை வலித்து நின்றனர்; வில்லிடத்து அம்பு தொடுத்துவிடப் புகுமிடத்து எதிர்த்தவரை வாளால் வெட்டினர்; வெட்ட, உடல்கள் இரு துண்டாய் விழுந்தன;

அவற்றுள் ஒரு துணி குறிவைத்த இலக்கை அழிக்க, விடுபட்ட பிறைமுகக்கணை “அரிது அரிது” என்று கூறி எல்லோரும் அதிசயிக்கும்படி பரிவீரரின் முடி களையும் அடிகளையும் கொய்து வீழ்த்திற்று; அடியும் முடியுமற்று விழுவோர் தமது அம்பை மார்போடணைத்தனர். நாணேற்றிய அச்சரங்கள் விடுபட்டுப் பல வில் நாண்களை அறுத்தன. விடுசரங்களால் நாண் துணிவுற்றவர், விற்களை முறித்தெறிபவர்போல் அவற்றை எறிந்து எதிர்த்து வருகின்ற கழல் கட்டிய வீரரின் உடல் இரு வகிர்படும்படி வாளால் வெட்டி னர். பகைவர் ஆயுதங்கள் தம்மேற்படாது எடுத்த மந்திர வேலிபோலக் கலிங்கர் பரிசைகளை நட்டு வைத்தனர்.

நட்ட பரிசைகள் மீது வேல்கள் பாய்ந்து திறந்த வாய்கள், வட்ட நிணமதிலுக்கு வைத்த துவாரங்கள் போன்றன. கலக்கமில்லாத வீரரின் வாள்கள் எதிர்த்த சூரரின் கையிடத்துள்ள உலக்கையின் உச்சியிற் பாய்ந்து தைத்தபோது உழுங் கலப்பை போன்றன. சுருண்டு விழும் மதயானையின் கரம், தன்மீது வலிய சரம் தைத்தபோது சக்கரப் படையை ஒத்தது. கொடிய யானையின் மத்தகத்தினின்றும் சொரி யும் முத்துகள், வீரமாதுக்குச் சொரியும் மங்கலப் பொரிபோன்றன. பரிசை யுடன் துஞ்சிக்கிடக்கும் வீரர் தேர்ச்சில்லோடு கிடக்கும் மலைபோன்றனர். வீரர் ஏவிய சக்கரப் படைகள், மறித்தெறிந்த தண்டுகளுள் நுழைந்து கையிடத்தேந்திய கூர் மழுக்கள் போன்றன. பிணங்களோடு ஆடும் பேய்கள், நிருத்தமாட ஆட்டுவிக்கும் நிருத்தகாரரை ஒத்தன. ஒட்டகங்கள், யானைகளையும் குதிரைகளையும் வாளினால் வீசி எறிந்து செய்யும் போரை விட்டு நீங்க மனமின்றித் திரும்புவபோல் மீண்டன. விளங்கும் இரத்தக் கடலிற் பிளிறி விழும் யானைக் கூட்டங்கள், ஒலியுடைய கடல் நீருட் படிந்த மேகத்தை ஒத்தன. யானையின் கைகளை வாளினால் வெட்டித் தோளிலிட்ட வீரர் துருத்தியைத் தோளிலிட்டு நீர்விடும் துருத்தியாளரை ஒத்தனர்.

பகைவர் வில்லிடத்துச் சரந்தொடுத்து விடுதலும், அம்பில்லாத சில வீரர் மார்பிற் தைத்த அம்பைப் பிடுங்கிச் சாபத்திற்றொடுத் தெய்தனர். விருதர்கள் குதிரையின் மார்பிற் சவளப் படையை அழுத்தி உயர்த்திய தோற்றம், சயமாதுக்குக் களத்தே எடுத்த கொடியை ஒத்தது. இரு தொடை களுமற்றுக் கிடக்கும் வயவர், எதிரே வருகின்ற யானையின் வலி கெடும்படி ஒரு தொடையை விட்டெறிந்து ஒரு தொடையை இனி எறிதற்கு இட்டு வைத்தனர். ஒத்த பலமுடைய இரு வீரர், ஒருவர் மார்பில் ஒருவர் உடை வாளை ஏற்றி ஒருவர் போல்வீழ்தலின் பெரிய ஆர்ப்பெழுந்தது. பொரும் வீரர் சிலர், தம் மார்பைக் குத்தக் கவிழ்ந்து வருகின்ற யானைகள் மீது அடிவைத்தேறி மீதிருக்கும் சூரரின் தலைகளை அரிந்தனர்; அவை விழும்போது “அறை” என்று அக்களிற்றினுக்குச் சத்தமிட்டன.

சிலர், தமது மார்பைக் குத்தக் கவிழ்கின்ற போர் யானையின் மத்தகத்தை அடித்தனர். பின் அது தங்களிறென்றறிந்து நாணிப் படைஞர் இகழ்வாரென அஞ்சி, அதனைக் கொல்லாது விடுகிலர். இவ்வாறு இருதிறப்படைகளும் விடாதும் இளைக்காதும் அதிவீரச் செயல்களைக் காட்டி ஒத்த பலத்தொடு போர் செய்தலும் போரை முடித்து வாகைசூட நினைந்து வண்டையர் அரசனும், அரசர்க்குத் தலைவனும் விசயதரனது மந்திரியுமாகிய உலகம் புகழும் கருணாகரன் ஒரு கையும் இரண்டு கொம்புமுடைய மதமலை ஒன்று உகைத்துப் போர்முகத்துள் நுழைந்தான்; புகுதலும், அவன் படைகள் உற்சாகம் மிகுந்து ஒருமுகமாக முன் சென்றன. தேவர்களும் அப்போரைக் காண முந்தினர்; கலிங்கரின் மதயானைகள் துணிபட்டு விழுந்தன; நிரைத்த குதிரைகளோடு தேர்கள் ஒடிந்தன; வீரர் தலைகள் குவிந்து மலைபோல் வானில் வளர்ந்தன; இரத்த வெள்ளம், ஒலிக்கின்ற கடல்போற் பாய்ந்தது; குடர்கள் இரத்த வெள்ளத்தின்மீது பரந்து நீந்தின. குதிரை செலுத்தும் கோல்களும் சேணங்களும் சிதறிக்கிடந்தன. திசைகளோடு அட்டகிரிகளும் அதிர்ந்தன. எங்கும் திமிலகுமிலமாயிற்று. புரசையிலிருந்து ஆயிரம் மத யானைகளைக் கொணர்ந்து பொருவோம் என்று ஆணை கூறிய ஏழு கலிங்க அரசன் வீரம் குன்றியது. அவன் வீரர் அமரில் எதிர் நிற்கமாட்டாது ஓடி ஒதுங்கினர்; அலதிகுலதியா யச்சங்கொண்டு, “இப்படை என்ன மாயையோ மறலியோ ஊழியின் கடையோ” என்றலறி அறிந்த மலைக் குகைகளிற் பதுங்கவும், அரிய பிலங்களிடை மறையவும், அடவியிற் கரப்பவும் சிதைந்தோடினர்.

சிலர் கும்பிட்டு நின்றனர். சிலர் கடலிற் குதித் தொளித்தனர். சிலர் உடலிற் கரியைப் பூசி மறைந்தனர். சிலர் வழிதேடிப் பிலங்களிற் புகுந்தனர். இவ்வாறு ஒருவர் போனவழி ஒருவர் போகாது கரந்தனர். இருவர் ஒருவழி போகாது ஒருவர் ஒருவராக ஓட முந்தினர். ஓடுமிடத்துத் தமது நிழலைக்கண்டு, தம்மைத் துரத்திச் செல்லும் சோழ வீரரென்று அஞ்சினர். சிலர் நாம் அருகர் அருகர் எனக் கூறி அபயம் அபயம் என்று நடுங்கினர். முகில் அதிர்வது போல் அதிர்ந்து எழும் சோழனது யானைப் படையைப் போன்றிருண்ட குகைகளில் நுழைந்தோர், போரிடத்து நமது முதுகுகள் செய்த உபகாரம் இது எனக்கூறினர். இரண்டு குலத்துக்கும் நீங்காத சிறப்பாக விளங்கும் விசயதரன் எளிதில் வெற்றி மாலை புனைய, ஏழு கலிங்கப் படையும் ஒருமுகமாய்முறிந்து அபயமிட்டது.

ஏழு கலிங்கத்தையும் கருணாகரன் அழித்த நாள் ஏழு கலிங்கர் ஓர் ஆடையை உடுத்தனர்1. இவ்வாறு கலிங்கர் ஓடப் படைவீரரின் கைப்பட்ட யானை குதிரை முதலியவற்றைக் கணித்துரைப்பவர் யார்?

“புண்டொறும் குருதி பாயப் பொழிதரு கடமும் பாய
வண்டொடும் பருந்தினோடும் வளைப்புண்ட களிறநேகம்”
“ஒட்டறப் பட்டபோரி லூர்பவர் தம்மை வீசிக்
கட்டறுத் தவர்போ னின்று கட்டுண்ட களிறநேகம்”
“வரைசில புலிகளோடும் வந்துகட் டுண்ட வேபோ
லரைசருந் தாமுங் கட்டுண் டகப்பட்ட களிறநேகம்”

கதியுடைய குதிரையும், தேரும், நவநிதியும், மகளிரும் என்று அவர்கள் கைக்கொண்டவற்றை அளவிடல் அரிது. அவற்றை எல்லாம் கவர்ந்தபின் கருணாகரன் தன் படை வீரரையும் ஒற்றரையும் நோக்கி, “ஏழு கலிங்கரது அரசனையும் பற்றிக்கொண்டு பெயர்தற்கு அவன் இருக்கு மிடத்தை அறிந்து வருமின்” எனக் கூறினான். கூறுதலும் ஒலிக்கும் கடல் போன்ற வீரரும் ஒற்றரும் கடிது சென்று மலைகளிலும் வனங்களிலும் முனி வர்கள் இருக்கும் பன்னசாலைகளிலும் தடவிப் பார்த்துத் திரும்பிவந்து, “அவனது அடிச்சுவடும் பெற்றிலோ” மெனக் கூறினர். பின் சில ஒற்றர்கள் வந்து, “அவன் இருக்குமிடத்தை அறிந்தேம். ஒரு மலையிடத்தைச் சார்ந்து கொடிய சில வீரரைக் காவலாகக் கொண்டு உறைகின்றான். அவ்விடத்தை அடைதல் அரிது” என விளம்பினர். உடனே அவன் வீரர், கலிங்க நாட்டில் வேறு மலையும் கடலும் நாடும் தேடுவதற்கு இல்லை எனும்படி அவற்றை எல்லாம் தேடிச் சூரியன் அத்தமனகிரியை அடையும் அளவில் கலிங்க வரசன் இருந்த வெற்பை அணுகினர்.

அணுகி, தோலாத களிறுடைய அபயன் பன்றி வேட்டையாடற்கு வளைத்தடைத்த வேலியைக் காப்பார் போல வேலாலும் வில்லாலும் வேலி கோலி மலையை விடியுமளவும் காத்து நின்று கலிங்கவேந்தனை அகப் படுத்தினர். இம்மலை இயல்பாகவே சிவப்பாக ஒளிபெற்றதோ? அன்றி இது சூரியன் உதயமாகும் உதயகிரிதானோ? என்று கண்டார் ஐயுறும்படி கலிங்கரின் இரத்தம் ஆறாகப் பெருகிற்று. அப்போது துகிலுரிந்த கலிங்கர் மாசுபூசித் தமது மயிரைப் பறித்தெறிந்து “நாம் அமணர்” எனக் கூறிப் பிழைத்தனர். அநேகர், சிலை நாணை முந்நூலாக மடித்துத் தரித்து, “யாம் கங்கையாடச் செல்பவர்கள்; விதிவசத்தால் இம்மலையில் அகப்பட்டுக் கொண்டோம்” எனக் கூறிப் பிழைத்தனர். அநேகர் குருதி தோய்ந்த கொடிச் சீலைகளைக் காவியாடையாக உடுத்துத் தலையை மொட்டையடித்துக் கொண்டு, “உடையைக் கண்டால் எங்களைப் பௌத்த ரென்றறியீரோ” எனக் கூறி அபயமிட்டோடினர். அநேகர், தங்கள் யானைகளின் கழுத்திற் கட்டியிருந்த மணிகளை அவிழ்த்துக் கையிற் பிடித்துக் கொண்டு, “ஐயா! நாங்கள் தாளம்பிடித்துப் பாடி ஆடும் தெலுங்கப் பாணர்கள்: சேனைகள் மடிந்து கிடக்கின்ற கலிங்கப் போர்க்களத்தைக் கண்டு திகைத்து நிற்கின் றோம்” எனச் சொல்லிப் பிழைத்தோடினர்.

“வேடத்தாற் குறையாது முந்நூ லாக
வெஞ்சிலைநாண் மடித்திட்டு விதியாற் கங்கை
யாடப்போந் தகப்பட்டேங் காத்தோம் பென்றென்
1றபிதாவிட் டுயிர் பிழைத்தா ரநேக ராங்கே”
“குறியாகக் குருதிநீர்க் கோடி யாடை
கொண்டுடுத்துப் போர்த்துத்தங் குஞ்சி முண்டித்
தறியீரோ சாக்கயரை யுடைகண் டாலென்
றப்பிரமண் ணியமிடுவா ரநேக ராங்கே”
“சேனைமடி களங்கண்டு திகைத்து நின்றேந்
தெலுங்கரே மென்றுசிலைக் கலிங்கர் தங்க
ளானைமணி யினைத்தாளம் பிடித்துப் பாடி
யுடிப்பாண ரெனப்பிழைத்தா ரநேக ராங்கே”

இவ்வாறு தப்பி ஓடியவர்களே பிழைத்தனர்; கலிங்க ஓவியர் சுவரில் எழுதிய ஓவியங்களும் பிழைத்தன; மற்றவர்களை எல்லாம் சோழ வீரர் பிடித்திழுத்து அறுத்தெறிந்தார்கள். கடல்போன்ற கலிங்கரது படையை வென்று சயத்தம்பம் நாட்டி மதயானைகளும் வலிய குதிரைகளும் குவிதன முங்கொண்டு, விளங்குகின்ற வாளுடைய அபயன் அடியை வண்டயர்க் கரசனாகிய தொண்டைமான் அருளோடு சூடினான். இப்போர்க்களம், தேவாசுர யுத்தங்கள் உண்டென்ற ஒழியாத பேச்சை அடக்கிற்று.
களங்காட்டியது
“இறைவீ! கொலைக்களத்தைக் கண்டருளுதி” எனக் கூளி வேண்டு தலும், காலகண்டன் மகிழ்கின்ற அமுதை ஒத்த காளி போர்க்களத்தை அணுகி, “இக்கொடிய போர்க்களம் என்னே!” என்று அதிசயமுற்று அப் பேய்க் கணங்கள், அக்களத்துள்ளவற்றைக் கண்டருளும்படி காட்டிக் கூறுகின்றாள்:

உடல்மீது பட்ட காயங்களினின்றுங் குருதி சொரியப் பின்னங் காலோடு இரத்தவெள்ளத்தில் துடித்துச் செல்லும் மரக்கலங்கள் போன்றன, பார்மின். உயர்ந்த நற்குதிரை மீதிட்ட கலணை சாயும்படியாய் நிணச் சேற்றிற் கால்கள் புதைந்து நிரையே நிற்கும் குதிரைகள், குருதி வெள்ளத்தை அணைகட்டக் குதிரைப் பாய்ச்சலாக நிறுத்திய தறிகளை ஒத்தன, காண்மின். விருந்தினரும் வறியோரும் நெருங்கியிருந் துண்ண முக மலரும் மேலோர் போற், பருந்தினமும் கழுகினமும் படிந்துண்ண, மலர்ந்த பங்கய வதனங் களைக் காண்மின். சாமளவும் பிறர்க் குதவாரை விரும்பிச் சார்ந்தவர் களைப் போல வீரருடலிற்றங்கும் ஆவி போமளவும் அவரருகே இருந்து பின்னும் விட்டு நீங்காத பல நரிக்கூட்டங்களைக் காண்மின். சாய்ந்து விழும் மதயானைகளுடன் சாய்ந்து குருதியிற் படியும் கொடிகள், கணவருடன் எரி புகுந்து உடன்மடியுங் கற்புடை மாதரை ஒத்தன காணமின். கற்புடை அரிவையர் சிலர், தங்கணவருடன் தாமுஞ் செல்வதற்கு, ‘எங்கணவர் கிடந்த இடம் எங்கே’ என்று பேய்களைக் கேட்பர்; தடவிப்பார்ப்பர்; இடா கினிகளையுங் கேட்பர், பார்மின். தன் கணவன் வாய் மடித்துக் கிடத்தலைக் கண்டு, ‘மணி அதரத்து ஏதேனும் வடுவுண்டனையோ? நீ இதழ் மடித்துக் கிடத்தற்குக் காரணமென்ன?’ என்று கூவிப் புலம்பி ஆவி சோர்கின்ற வளைக் காண்மின். பூமாது தன் கணவன் உடலைத் தாங்காமல் தன் கரத் தாற்றாங்கி, விண்ணாட்டரிவையர் அவனைச் சேர்வதன்முன் தன் ஆவியை உடன் விடுவாளைக் காண்மின். பொருந் தடக்கையில் வாளெங்கே? மணி மார்பெங்கே? போர்முகத்தெவர்வரினும் புறங்கொடாத பெரியவயிரத்தோ ளெங்கே; என்று பயிரவியைக் கேட்பாளைக் காண்மின்; காண்மின்.

“பொருதடக்கை வாளெங்கே மணிமார் பெங்கே
போர்முகத் தெவர்வரினும் புறங்கொ டாத
பருவயிரத் தோளெங்கே யெங்கே யென்று
பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்”

பாய்ந்துவரும் குதிரையைப் பிடித்து ஆளை ஆளோடு அடித்துப் புடைக்கப் புண்ணின் நீரோடித் தெறித்துக் கருமேகம் சிவந்த மழை பொழிவதைப் பார்மின் களத்தே நெருங்கிய நிணப்போர்வை மூடக் கருங் காகம் வெண்காகமாக மாறிய ஒருபோதுமில்லாத புதுமையைக் காண்மின். நெருங்கிய தேர்க்கொடிஞ்சி தாமரை மொட்டாகவும், இரத்தம் நீராகவும், விழுகின்ற கொடி இலையாகவும், அச்செங்களம் தாமரைப் பொய்கையாக விளங்குவதைக் காண்மின். அம்புகளும் வேல்களும் மொய்த்து விழாது நிற்கும் வீரர் கழைக்கூத்தர் கயிற்றால் கட்டிச் சாயாது நிற்கும் மூங்கில் போன் றனர். பார்மின் உடற்குறையின்மீது ஏறிய அம்பு புதையும்படி மேலிருந்து சிறகு விரித்தாடும் பருந்தின் ஆட்டத்தைக் காண்மின். வருகின்ற பகை வரின் சேனை தம் படைமீது வந்துறாதபடி வாள்வீரர், தம் உயிர் கெடும்படி வீரங் காட்டிச் செஞ்சோற்றுக்கடன் கழித்த கைமாற்றைக் காண்மின். யானை வீரர் எதிர்த்தபோது அற்று எழுந்தாடுகின்ற தலைகள், வீரமாது எறிந்தாடும் அம்மானைக் காய்கள் போன்றன பார்மின். எதிர்கொள்கின்ற தேவரின் விமானங்களிற் றேவராய் ஏறும் வீரர், எண்ணுதற்கரிய அநேகராதலின், விண்ணுலகத்திலும் இவ்வகைப் பெருநாள் இல்லை என அத்தேவர் ஐயுறுதலைக் காண்மின். கலிங்கரது யானை சொரியும் மதம் கடல்போற் பெருக அதைத் தடுத்தும், பரிகளாகிய திரையை அலைத்தும் அமர்செய்த கலிங்கரது உடலினின்றும் பெருகி இரத்தக் கடல்மீது கவரிபோல நுரை பரந்தோடுதலைக் காண்மின். உலகைக் காக்கும் விசயதரன் 1முன்னொரு போது பெரிய கடல்மீது அணையிட ஒப்பிலாத வில்லை விளைத்தபோது, குரங்கினம் கடலிடத்தே குவித்த மலைக்கூட்டம்போலக் கரிய யானைப் பிணங்கள் அவ்விரத்தக் கடலிற் கிடப்பதைக் காண்மின். பகைவர் விடுத்த அம்பு, பரிசையையும் கவசத்தையும் ஊடுருவி மார்பைப் பிளக்க ‘இவன் விற்றிறமை என்னே’எனக்கூறிக் கைம்மறித்து விழும் வீரரைக் காண்மின். தேவர்களாகி மேல் எழுகின்ற வீரர் மாத்திரமல்லர், கண்ணிமைப்பு நீங்க முகமலர்ந்து கிடக்கும் உடல்களும் தேவரை ஒத்தன பார்மின். பிறைபோன்ற மருப்புடைய யானைகள் வாலும் தளையும் துணியுண்ணத் தலையற்றுக் கிடக்கும் துண்டங்கள் கொல்லன் உலையில் இரும்படிக்கும் சம்மட்டி களைப் போன்றன, பார்மின். வாயிற் புகுந்த வேலைக் கையாற்பற்றி நிலத்திற் சரியும் வீரர் வாத்திய மூதுவோரை ஒத்தனர் காண்மின். மார் பிடத்துப் பாய்ந்த நீண்ட வேலைப்பிடுங்கி நிலத்தே ஊன்றித் தேர்மேல் நிற்போர், முன்னே இரத்தவெள்ளம் கிடத்தலின் படவு ஒட்டும் தொழிலோர் போன்றனர் பார்மின். வாயலம்புகின்ற இரத்தத்தோடு நிணத்தைக் கவர்ந்து பறக்கும் பருந்தைப் பின்னொரு கூரிய நகமுடைய பெரிய பருந்து பின் தொடர்ந்து, முகில்கள் ஓடுகின்ற அகன்ற ஆகாய வீதியிற் சண்டையிட்டுப் பிணத்தைப் பறிக்க வலிய வாய் கிழிந்து அது நிலத்தில் வீழ்வதைப் பார்மின். சதுரங்க சேனைக்குத் தலைவனைப் போர்க்களத்தே வந்த பெரிய வயிறுடைய பூதம் அருந்திய பெரிய தலையைச் சுமந்து வயிறூதி ஒரு பெரும் முகில் போல் வருதலைக் காண்மின். முதிய மலைமீதேறி இருப்போரை ஒத்த யானை வீரர் போர்க்களத்துத் தம் முதுகு வடுப்படும் என அஞ்சி நின்று மார்பிடத்தே வடுப்பட்டுக் கிடத்தலைக் காண்மின்.

“சாதுரங்கத் தலைவனைப்போர்க் களத்தில் வந்த
தழைவயிற்றுப் பூதந்தா னருந்தி மிக்க
சாதுரங்கத் தலைசுமந்து கமஞ்சூற் கொண்டு
தனிப்படுங்கா ரெனவருமத் தன்மைகாண்மின்”
“முதுகுவடுப் படியிருக்கு மென்ன நிற்கு
முனைக்களிற்றோர் செருக்களத்து முந்து தங்கண்
முதுகுவடுப் படுமென்ற வடுவை யஞ்சி
முன்னம்வடுப் பட்டவரை யின்னங் காண்மின்”

கூழடுதல்
“போர்க்களம் முற்றும் காட்டுவதற்கு முடிவதன்று; ஆளை அடு தற்குக் கவிழுகின்ற மதயானையின் இரத்தஞ் சொரியக் குளம் மடைதிருந் ததுபோற் குமிழி விட்டுப் பெருகும் இரத்தத்திற் றோய்ந்து கூழடுங்கள்” என்று அணங்கு சொல்லக் கணங்கள் கும்பிட்டுக் கூழடத் தொடங்கின.

குறுமோடீ! நிணமாலை! கூடைவயிறீ! கூரெயிறீ! நீலி! மாடீ! குதிர் வயிறீ! எல்லீரும் கூழட வாருங்கள். யானை மருப்பினாற் பல்லை விளக்கு மின்; அதன் பழுவெலும்பை ஒடித்து நாக்கை வழியுமின்; அம்பின் வாயாகி ய உகிர்கொள்ளியால் நகங்களைக் களைமின்; பாய் களிற்றின் மதமாகிய எண்ணெயை ஒழுக ஒழுகத் தலைக்கு வைமின், எண்ணெய் போக வெண்மூளை என்னும் களிமண்ணைத் தேய்த்து இரத்த மடுவிற் கூட்ட மாகப் பாய்ந்து நீந்தி யாடுமின்; இரத்த மடு அத்தனையும் அம்பும் வேலும் குந்தமும் கிடப்பதால் இக்கட்டுக்குப் பயந்தோர் கரையிடத்தே இருந்து குளிமின்; ஆழ்ந்த இரத்த மடுவில் நீந்தி நெடுநேரம் விளையாடாது கரையேறி, வீழ்ந்த கலிங்கரின் நிண ஆடையை விரித்து விரித்து உடுமின்; மதயானைகளின் கிம்புரிகளை அழகிய கை வளையல்களாக அணிமின்; குதிரைகளின் சதங்கை சேர்த்திய மாலைகளை, முத்தை உள் மணியாக இட்ட பாதசரங்களாக அணிமின்; செருவிடத்து வீர ரெறிந்த பெரிய வளை தடிகளை, வேண்டியளவும் வாயை நெகிழ்ந்து, 2விடுகம்பிகளாக அணிமின்; பெரிய யானையின் கரிய கரங்களைக் 3கரு நாணாகக் கட்டுமின்; இரட்டை முரசமெடுத்து நடுவே வாளின் பிடியைச் செருகி இரட்டை முரசமெடுத்து நடுவே வாளின் பிடியைச் செருகி இரட்டை 4வாளியாக அணிமின்; பட்ட குதிரையின் குளம்புகளை வாகுவலயமாக அணிமின்; எறிந்து கிடக்கும் புரியுடைய சங்குகளை ஏகாவலியாக அணிமின்; சினந்து பொருத வீரரின் கண்மணியும் யானை மத்தக முத்துங்கொண்டு மயிரிற் கோத்து அழகிய மாலைகளாக அணிமின்; இன்னும் பலவாறாக அணிகளைச் சுமத்தி அலங் கரித்துக் கொண்டிருப்போமாயின் பொழுது போய்விடும்;

பசி அதிகரிக்கும். ஆதலின் பணி பூணுவதை இவ்வளவில் நிறுத்தி உண்பதற்காகிய சமைய லுக்கு ஆயத்தஞ் செய்யுங்கள். பெரிய உடலுடைய மதயானையின் பிண மாகிய மலைமீது வலிய கழுகின் சிறகால் வேய்ந்த அழகிய பந்தரின்கீழ் அடுக்களையைக் கொள்ளுங்களம்மா; யானைகள் பொழிகின்ற மதத்தால் நிலம் மெழுகிப் பொடிந்துதிர்ந்த முத்தை உலக்கைமேல் வைத்திழுத்துக் கோலமிடுமின்; மதயானைகளின் மத்தகங்களை அடுப்பாகக் கொண்டு விரைவாகச் சமையுங்களம்மா; கொற்ற வாளை வீரரோச்சக் குடரொடு தலையும், காலும் அற்று வீழ்ந்த ஆனையாகிய பானையை அடுப்பில் வையுங்களம்மா; வெண்தயிரும் செந்தயிரும் கலந்து கிடக்கும் மிடாக்கள் போற் கிடக்கும் வீரரின், மூளையாகிய குளிர்ந்த தயிரையும் ஈரலையும் பெரிய மிடாக்களிற் கொள்ளுங்களம்மா; கொல்கின்ற யானையாகிய மிடாவுட் குதிரையின் குருதியைக் கூழடுதற்கு உலையாக வாருங்கள்; களத்தே துள்ளி வீழ்ந்த குதிரையின் வெண் பல்லாகிய உள்ளியையும் கிள்ளியிட்டு நகங்களாகிய உப்பையும் இடுமின்; விண்ணுலகடையினும் கண்ணினின்றும் நீங்காத வீரரின் கோபாக்கினியாகிய நெருப்பை மூட்டுமின்; வேலும் அம்பும் குந்தமும் எறிதடிகளுமாகிய விறகு தடிகளை முறித்தெரிமின்; கல்லைக் கறித்துப் பல் முறிந்து கவிழ்ந்து வீழ்ந்த கலிங்கர் தம் பல்லைத் தகர்த்துப் பழவரிசியாக எடுங்கள்; சுவையைத் தரும் மிகுந்த கூழுக்கு இடும் அரிசியைக் கறைபோகத் தீட்டுங்கள்; கண்ணுடைந்த முரசங் களை உரல்களாகக் கொள்ளுங்கள்; இவ்வுரல்களின் எல்லா அரிசியையும் கொட்டிக் கொல்லும் யானையின் தந்த உலக்கையை ஓங்கி இட்டுச் சலுக்கு முலுக்கெனக் குத்துங்கள்.

“கல்லைக் கறித்துப் பன்முறிந்து
கவிழ்ந்து விழுந்த கலிங்கர் தம்
பல்லைத் தகர்த்துப் பழவரிசி
யாகப் பண்ணிக் கொள்ளீரே”

“இந்த வுரற்க ணிவ்வரிசி
யெல்லாம் பெய்துகொல் லானைத்
தந்த வுலக்கை தனையோச்சிச்
சலுக்கு முலுக்கெனக் குத்தீரே.”

வள்ளைப்பாட்டு
வாசனை பொருந்திய மாலையணிந்த சயதுங்கனாகிய எங்கள் தலைவனது வாள்வலியால், எமது மெலிவு நீங்கும்படி பிணங்களைத் தந்த நாச்சியைப் பாடீர்; பெரிய திருவுடையாளைப் பாடீர்; கதியோடு கூடிய உயர்ந்த பரியுடைய விசயதரனாகிய காவிரி நாடுடையவனது இரு தோள்கள் உலகைச் சுமந்ததைப் பாடீர்; அரவு சுமை தவிர்ந்ததைப் பாடீர்; இராசாதி இராசனாகிய விசயதரனது வாரணம் இவ்விடத்தே மதங்கொள்ள அவ்விடத்துப் பாண்டியர் போர்க்குடைந்தோடினமையைப் பாடீர்; சேரர் வெருவி ஓடினமையைப் பாடீர்; வணங்கிய சேரர் மணிமுடியையும் பாண்டியர் திருமுடியையும் இடறிய சேவடிகளைப் பாடீர்; எங்கள் பெரு மானது திருவடியைப் பாடீர்; விளங்குகின்ற நீண்ட வேலுடைய வாள பயற்கு வடநாட்டவர் திறையளித்த களிறு வரும்படி பாடீர்; கடல்போன்ற மதம் நாறுவதைப் பாடீர்; கடல் சிறிதென்னும்படி வட்டித்த கொற்றக் குடையுடைய பண்டித சோழனது மலர்ப்பாதங்களிற் பகைவர் அடைந் தமை பாடீர்; அவனது சிலைவலி வாள்வலிகளைப் பாடீர்; எப்பகலிலும் 2வெள்ளணி நாளிலும் நிலமகளைப் நிழற் செய்யும் கொற்றக் குடையைப் பாடீர்; வண்டை வளம் பதியைப் பாடீர்; மல்லையையும் கச்சியையும் பாடீர்; பல்லவர் தோன்றலாம் கருணாகரனைப் பாடீர்; வேழ நிரைகளைக் கொன்று பரணியை நம்மரசனுக்குச் சூட்டிய கருணாகரனைப் பாடீர்; தொண்டையர் வேந்தனைப் பாடீர்.

துலையிலிட்டு நிறுத்துத் திறையை வைத்து விசயதரன் புருவத்துக் கடைபார்த்துத் தலைவணங்கும் கதிர் முடிகள் நூறாயிரம். எமது அரசனாகிய முதல்வன் சூடும் முடி ஒன்றே. அவன் அடிசூடும் முடிகளை எண்ணின் ஆயிரம் நூறாயிரமாகும். முடியினால் வழிபட்டுச் சொன்ன திறையிடாத வேந்தரின் அடிகள் மிதித்தோடிய அரிய மலைகள் நூறாயிரம். அவன் மந்திரிமார் இருக்கும் வாயிலிடத்துப் பார்வேந்தர் படும் சிறுமை நூறாயிரம். போர் தாங்கும் களிறுடைய விசயதரன் இரண்டு புயம் பாரைத் தாங்கப் பொறை தவிர்த்த பாம்பின் தலைகள் ஆயிரம்; நான்கு கடல்களை யும் கவித்த குடையுடைய விசயதரன் அமுதமெழப் பாற்கடலைக் கடைந் தருளும் பணைத்த தோள்கள் ஆயிரம். நிலவேந்தர் தலைகளால் இரண்டு தாள்களையும் தாங்குகின்ற விசயதரன் தனது இரண்டு தோள்களால் முன் துணித்த வாணனது தோள்கள் ஆயிரம். முகபடாம் போர்த்த களிற்றபயன் கிருட்டிணனாகத் துரியோதனாதிகளிடம் தூது நடந்தபோது சக்கரம் முதலிய படைகள் தாங்கிய அழகிய தோள்களாயிரம்.

பல்லரிசிகள் எல்லாம் இனிக் கூழுக்கிடத்தக்க பழவரிசி ஆயின; 2சல்லவட்டம் என்னும் சுளகாற் றவிடுபோகப் புடையீர்; கைகளினால் நிலம் மெழுகிக் கலிங்கரின் அழகிய அம்பறாத் தூணிகள் நாழியாகத் தூணிமா அளவுங்கள்; கைக் கவசங்களைச் சிறியவும் அம்பறாத்தூணிகளைப் பெரியவும் கூடைகளாகக் கொண்டு உரலிலிட்ட அரிசியை இறக்கி உலை யிடத்தே இடுங்கள்; 3பரணிக்கூழ் பொங்கி வழியாது, கையைக் காம்பாக இறுக்கிய பெரிய குதிரைக் குளம்பாகிய அகப்பையாற் றுழாவுங்கள்; கூழ் அடுப்பிலிருத்து கொதித்தது இனிப்போதும்; உப்புக் காண்பதற்கு எனக்கும் வார்த்து நீங்களும் உள்ளங்கையில் ஒவ்வோர் துளி வார்த்துக் கொள் ளுங்கள்; அழல், கையைச் சுடாதிருக்க நெருப்பை அவித்துக் கைத் துடுப்பி னாற் சுழலச் சுழலப் பக்கமெல்லாந் துழாவுங்கள்; இக்கூழின் பதத்தைக் கையினாற் றொட்டுப்பாருங்கள்; இதன் பதமுஞ் சுவையும் முன் உண்ட கூழ்கள் எல்லாவற்றிலும் மிக நன்று.

இனி இதனை இறக்க வாருங்கள்; எடுத்துக் கையிற் கவிழ்த்துக் கொள்ளாமற் குதிரைமீதிட்ட துணிகளை இருமருங்கும் அண்டப் பிடித்து மெதுவாக அடுப்பினின்றும் இறக்குங்கள். ஒரு வாய்கொண்டு குடிக்க இது தொலையாதென்று அஞ்சி நின்றீராயின், இக்கூழுண்ண ஆயிரம்வாய் வேண்டுமோ? வெந்த இரும்பில் நீரைத் தெளித்தது போல் உண்டு பசியால் வெந்தெரியும் இந்த உடம்பை நாவாற் றோய்க்கில் எல்லாக் கூழுஞ் சுவறாதோ? பண்டும் இதுபோன்ற மிகுந்த பரணிக் கூழை இவ்வுலகிற் கண்டறியேம்; நீர் சொன்ன உபாயத்தைக் கைக்கொண்டால் உண்டு மிகாது; கொதிக்கின்ற பெரிய இரத்த ஆற்றில் வேண்டிய தண்ணீரை யானையின் கும்பங்களிலே முகந்தெடுத்துக் குளிர வைத்துக்கொள்ளுங்கள்; மடிந்த களிற்றின் வாலாகிய கூட்டு மாற்றினாற் சுற்றி அலகிடுமின்; அலகிட்டு அலை எழுகின்ற இரத்த நீரைத் தெளித்து, உண்ணும் பாத்திரங்களை வைக்க நிலத்தைச் சமைத்துக் கொள்ளுங்கள்;

போர் வேந்தரின் கேடகங்களைத் திருப்பித் திருகணியாகப் பரப்புமின்; பார்வேந்தர் மண்டை ஓடுகளைப் பல பாத்திரங்களாகக் கொள்ளுமின்; இறந்த கலிங்கரின் பொற் பரிசைகளைப் பொற்பாத்திரங்களாகக் கொள்ளுங்கள்; விழுந்த முத்துக் குடைகளை வெள்ளிப் பாத்திரங்களாகக் கொள்ளுங்கள்; நிலத்தைச் சுத்தஞ்செய்து கொண்டு நீவிர் நீண்ட கையுடைய யானையின் பணைத்த காலாகிய கலங் களை அதிகம் கூழ்கொள்ளும் பாத்திரங்களாகக் கொள்ளுங்கள்; கோபம் மூண்டு ஆர்க்கும் வீரரின் விழிக்கனலும் நிணமும், அணங்கின் அருள் பெற்றார்க்குப் பகல் விளக்கும் பாவாடையுமாகக் கொள்ளுங்கள்; அழகாகக் கலங்களைப் பரப்பிப் பந்தி பந்தியாக நிரைத்திருந்துண்ணக் கூழை வாருங்கள்; கங்கை கொண்ட புரத்தின் மதிற்கு அப்புறத்தே பகைவர் சிரம் போய் விழுந்து இங்கே கிடக்கும் தலைகளை அகப்பைகளாகக் கொள்ளுங்கள்.

மணலூரிற் பாண்டியரோடு பொருதபோது அட்ட பரணிக்கூழைப் படைத்த பேய்களே! பந்திபந்தியாய் இருக்கும் பேய்களுக்குக் கூழை வாருங்கள்; நிறைந்த சுவையுடைய கூழைக் கண்டு, 1“பகவதி! பிட்சாந்தேகி” என்று பிச்சை கேட்கும் பிராமணப்பேய்க்குக் கூழை வாருங்கள்; உயிர் களைக் கொல்லாத சமணப் பேய்கள் ஒருபோது உண்பன; அவை உண்ண, மயிரில்லாது நிணத்துகிலால் வடித்து வாருங்கள்; தோளை மறைத்து நிற்கும் புத்தப் பேய்க்குக் கழுத்துமட்டும் நிறைந்து நாக்குழறும்படி மணம் மாறாத கஞ்சியாக வாருங்கள்; போராட்டின் உறுப்பனைத்தும் கொய்திட்ட கூழை, வெள்ளாட்டுக் குட்டிகளைத் தின்று வற்றிய பெரிய பேய்க்கு வாருங்கள்; கூழுக்கு ஆசை மிகுந்த களப்பேய் எடுத்தொளித்ததால் கலத்தைத் தடவிக் காணாது அரற்றும் குருட்டுப் பேயின் கைக்குக் கூழை வாருங்கள்;

வருந்தித் தன் பசி யுணர்த்தி, மிடா நிறைந்த கூழை விரலாற் சுட்டிக்காட்டிக் கையாற் பேசும் ஊமைப் பேயின் கலம்நிறையக் கூழ் வாருங்கள்; அடியேனுக்குப் பசியாலடைத்த காதுகள் திறந்தனவென்று கடவாயைத் துடைத்து நக்கிச் சுழன்று நின்ற சூல்கொண்ட பேய்க்கு இன்னுஞ் கூழ் வாருங்கள்; பொல்லாத ஓட்டைக் கலத்தே கூழ் புறத்தொழுகக் கவிழ்த்து நோக்கி எல்லாங் கொட்டித் திகைத்திருக்கும் ஊமைப்பேய்க்குக் கூழை வாருங்கள். துதிக்கையின் துண்டைப் பல்லின்மீது நேராக நிறுத்தி வைத்து, கையின் நுதிக்குக் கூழை வாரென்னும் எளிய பேய்க்குக் கூழை வாருங்கள்; இறைச்சியைத் தின்று, கூழ் முழுதையும் தான் குடித்துத்தன் கணவன் குடியானெனக் குலுக்கடிக்கும் கூத்திப் பேய்க்கு இன்னும் வாருங்கள்; பரணிக்கூழ் அடுதற்கு, முன் களத்தைக் கண்டு வந்து சொன்ன பேய்க்கு முன்வார்த்து நாமிருக்கும் ஊர்ப்பேய்களுக்குக் கலம் முட்ட வாருங்கள்; இரவிற் கண்ட கனாவுரைத்த பேய்க்கு இன்றைக்கன்றி நாளைக்கும் குதிரைத் தோலாகிய (பொதிகட்டும்) மடலில் பொதிந்து வைக்க வாருங்கள்; மகிழ்ச்சி இல்லாதிருந்தேமெல்லாம் மகிழும்படி சோதிடத்தால் இப்பரணியை அறிந்தேன் என்று கூறிய கணிதப்பேய்க்கு அகமகிழ்ந்து வாருங்கள்; மெல்லிய குடராகிய நிணத்தை அதக்குங்கள்; மெல்லிய விரலாகிய இஞ்சியை மெல்லுங்கள்;

முன்கை எலும்பினைக் கடித்துக் கொள்ளுங்கள்; மூளையை வாரி விழுங்குங்கள்; அரிந்திட்ட தாமரை மொட்டு என்னும் உள்ளியைக் கறித்துண்மின்; ஊதி அலைத்துண்மின்; உடல் ஓடி வியர்க்க உண்மின்; உந்தி மூச்செறிந்து இளைக்கும்படி உண்மின்; தனக்கு நான்கு வாய்கள்படைத்துக்கொண்டு எமக்கு ஒருவாய் படைத்த பிரமன் நாணும்படி களிப்போடு உண்மின்; கோபித்துக் கொதித்த கரியின் கும்பத்துக் குளிர்ந்த நீர் மொண்டு பொதுத்த துளையா லொழுகவிட்டுப் புசித்த வாயைப் பூசுங்கள்; குதிரையின் கலணையையும் செவிச் சுருளையும் பரடாகிய பாக்குப் பிளவையும் பட்ட கலிங்கரின் கண்மணியாகிய சுண்ணாம்பும் கலந்து மடித்துத் தின்னுங்கள், தாம்பூலத்தைப் பெரிதும் உண்டு புரைக்கேறப் பெற்றீர்! பாக்குச் செருக்கிய பேய்காள்! பூதத்தின் சிரத்தின் மயிரை மோந்தாற் பிழைப்பீர்கள் என ஒன்றுக்கு ஒன்று கூறி உண்டுகளித்தன.

இவ்வாறு களித்து வயிறு நிறைந்து ஏப்பமிட்டுப் பருத்து நின்ற பேய்கள் குன்று குதிப்பன போற்களத்தே நின்று கும்பிட்டுக் கூத்தாடின; குதிரைகளை விட்டுக் கலிங்கரோட விசயதரனது வீரர் குதிரைகளைக் கவர்ந்தமை பாடி மண்ணையும் அள்ளித் தூவி நின்றாடின. போர் தவிர்ந்து கலிங்கர் ஓட விசயதரன் ஏவிய தண்டின் இரு 1கைகளின் வெற்றியைப் பாடி இரு கைகளும் வீசி நின்றாடின; வழுதியர் நுழையும் மலைக் குகைகள் இவை எனும்படி மத யானைகளின் வயிறுகளுள் நுழைந்தன; உருவிய வாளோடு உயர்கணைவிடும் கலிங்கர் உருளும் வடிவிதென உருண்டன சில; பயந்தோடும் வீரர்களின் வடிவு இதென தலைவிரித்தோடின சில; முரசு, குடை, கவரி, விருது, கொடு, சுரிந்த சங்கின் நாதம் முதலியவற்றோடு சுமந்து வந்து எப்பொழுதும் அரசர் திறையிடும் அபயன் அடிகளை அடைய வாருங்கள் என்றன சில; இவ்வாறான நாடகங்கள் முடித்தபின் சூரியகுலத் துதித்தவனும் இந்திரனை ஒத்தவனுமாகிய குற்றமற்றவனது புகழை இனிப் பாடுவேமென்று எல்லாம் தொடங்கின;

இரு பிறப்பாளர் உள்ளிட்ட உயிர்கள் எல்லாம் அபயமெனப் புகுந்து அஞ்சாதிருக்கும்படி அபயமளித்த அபயன் தாள்களை வாழ்த்தின. நாற்றிசைகளிலுமிருந்து வந்த அரசர்களின்முன் அதட்டி உரப்புஞ் சிசுபாலன் வைத வசையைப் பொறுத்தானை வாழ்த்தின. காவிரித் துறைவனை வாழ்த்தின பொருநைக்கு அரையனை வாழ்த்தின. கங்கை மணாளனை வாழ்த்தின.

ஏழு கலிங்கரது ஆணையாம் சக்கரமும் ஓராழியின்கீழ் வந்த வட கலிங்கத்தை ஊழிகாலமட்டும் காத்தளிக்கும், உலகுய்ய வந்தானை வாழ்த்தின. பிரமா படைத்தளித்த புவியை இரண்டாவதும் படைத்துக் காப்பதும் என் கடனென்று காத்த கரிகால் வளவனை வாழ்த்தின.
வாழ்த்து
எங்கும் களிசிறக்க; தருமம் என்றும் எங்கும் நிலை உள்ள தாகுக; தேவரின் அருள் சிறக்க; முனிவர் செய்தவப்பயன் விளைக; வேதநெறி பரக்க; அபயன் வென்ற வெவ்விய கலிமறைக; சொல்லப்பட்ட புகழ் பரக்கவும் புவி நிலைக்கவும் மழை பொழிக.
முற்றும்

அரும்பொருள் விளக்கம்
  புரக்கும் - காக்கும்
  வாகைசூடி - வென்று
  விழைந்த - விரும்பிய
  இடையூறு - தடை
  களைதல் - நீக்குதல்
  ஊடி - வெறுத்து
  கடை - வாயில்
  விளித்து - அழைத்து
  வள்ளியோர் - கொடையாளிகள்
  கயவர் - கீழோர்
  செய்யுட் கருத்து - பாலுடைய கள்ளி பாலற்றுப் பொரிந்தது; ஆவரையு
  மப்படியே; கொடுக்குமியல் புடையோர் கொடை
  மறந்தால் கீழோரோ அதனை வளர்ப்பர்.
  யாக்கை - உடம்பு
  ஊன் - மாமிசம்
  பயில் - பொருந்திய
  யாத்த - பிணைத்த
  உருவம் - உடல்; மாமிசத் தினாலாகிய உடம்பு ஊழ் முடிய மறைந்து விடும்; புகழுடம்போ அழியாது என்றவாறு.
  வாதம் - தர்க்கம்
  மிலைந்து - சூடி
  அவைக்களம் - சபை
  பரிவு - விருப்பம்
  கூர்ந்து - மிகுந்து
  செவிமடுத்து - கேட்டு
  ஆர்வம் - ஆசை
  கோத்திரம் - வமிசம்
  தவளம் - முத்து
  கிரி - மலை
  கவளம் - திரணை
  மா - பெருமை
  களிறு - யானை
  மரபு - முறைமை
  சந்தம் - பொருள்; இசை
  மறைமொழிந்தபதி - பிரமா
  மரபு - வமிசம்
  திலகன் - திலகம் போன்றவன்
  காவலன் - அரசன்
  தோன்றல் -தலைவன்
  வளம் - செல்வம்
  பதி - நகர்
  பாரகர் - தேர்ந்தவர்
  கழல் - வீரதண்டை
  செம்பியன் - சோழன்
  கோன் - அரசன்
  மானவன் - வீரன்
  கோட்டம் - கோயில்
  கடி - பேய்
  வீட்டல் - கொல்லல்
  பராக்கிரமம் - வீரம்
  சுவீகாரபுத்திரன் - வளர்ப்புப்புத்திரன்
  பரஉலகம் - மறுஉலகம்
  மன்று - சிதம்பரம்
  மன்றிடையாடி - சிவன்
  இணை - ஒப்பு
  நறும் - நல்ல
  விள்ளலாம் - சொல்லலாம்
  உகுதல் - சொரிதல்
  புனல் - மழை
  கொட்டு - மண்வெட்டி
  கோம்பி - ஓந்தி
  தகர்தல் - உடைதல்
  பிட்சாந்தேகி - பிச்சையிடு
  தாரை - நீர்
  கவித்து - மூடி
  ஆஞ்ஞா சக்கரம் - ஆணையாகிய சக்கரம்
  தம்பம் - தூண்
  சிலை - வில்
  கணை - அம்பு
  விம்மிதம் - பூரிப்பு
  காடுகெழுசெல்வி - துர்க்கை
  தேம்பி - வாடி
  மாறி - வற்றி
  மா - விலங்கு
  புலம்புற்று - வருந்தி
  நிணம் - கொழுப்பு
  பருகுதல் - விழுங்குதல்
  வானுளோர் - தேவர்
  விரிபணப்பாந்தள் - விரிந்த படமுடைய பாம்பு
  விம்முகடு - உயர்ந்தமுகடு
  அமுதவட்டம் - சந்திரன்
  ஆலவட்டம் - விசிறி
  அயன் - பிரமா
  வகுத்த - உண்டாக்கிய
  பூதலம் - பூமி
  கணையமரம் - மதிற் கதவுச் செருகித் தாழிடும் திரண்ட மரம்
  உத்தரம் - வளைமரம்
  யாளி - சிங்கம் போல்வதோர் விலங்கு (இப்போது இல்லை)
  முகபடாம் - யானையின் முகத்திற் போர்க்குஞ்சீலை
  ஊசல் - ஊஞ்சல்
  தறுகண்மை - அஞ்சாமை
  ஆண்டலைப்புள் - மனிதரின் முகம் போன்ற தலையுடைய பறவை
  பரவுதல் - துதித்தல்
  குஞ்சி - உச்சிக்குடுமி
  அச்சுறுத்தல் - பயமுறுத்தல்
  தமருகம் - உடுக்கை
  அனாதியாய் - தொன்றுதொட்டு
  குழிந்து - பதிந்து
  அவுணன் - அசுரன்
  ததும்பி - நிறைந்து
  குரவை - கூத்து
  குண்டலம் - காதணி
  அண்டம் - ஆகாயம்
  குலகிரி - மலைக்கூட்டம்
  அம்மானை - கொக்கான் வெட்டுங்காய்
  கந்துகம் - பந்து
  வெற்றெலும்பு - இறைச்சியில்லாத எலும்பு
  கதுப்பு - கன்னம்
  கயல் - மீன்
  பறந்தலை - போர்க்களம்
  கடாரம் - பர்மா
  தீபக்காற்கட்டில் - ஒருவகைக் கட்டில்
  இரட்டி - வீசி
  கறைப்பல் - கரியபல்
  மோட்டு - திரண்ட
  குறைத்தல் - வெட்டல்
  கூர்ங்கத்தி - கூரியகத்தி
  புறக்கடை - வாயிற்புறம்
  விச்சை - வித்தை
  தோன்றல் - புதல்வன்
  கயிற்றுறி - கயிற்றினாற் செய்த உறி
  எயிறு - பல்
  விலாஇற - விலா எலும்பு ஒடிய
  மாளும் - மடியும்
  ஆணை - கட்டளை
  குன்று - மலை
  வாங்கி - பிடுங்கி
  புனிதம் - பரிசுத்தம்
  நேர் - ஒப்பு
  உந்தி - கொப்பூழ்
  அருக்கன் - சூரியன்
  ஐராவதம் - இந்திரனது யானை
  அரண் - காவல்
  துலை - தராசு
  தூங்கெயில் - அந்தரத்திலுள்ள மதில்
  தளை - விலங்கு
  உந்தி - செலுத்தி
  அட்டகிரி - எட்டுத்திக்கிலுமுள்ள மலை
  கொற்றம் - வெற்றி
  கண்வளரும் - நித்திரை கொள்ளும்
  சடாபாரம் - சடாமுடி
  இழைத்த - செய்த
  கடைக்கண் நோக்காய் - அருளாய்
  இமயாசலம் - இமயமலை
  புலருதல் - காய்தல்
  ஆலோ - அசை
  பிடி - பெண்யானை
  குருதி - இரத்தம்
  காலுதல் - விளங்குதல்
  வார்முரசு - வார்கட்டிய மேளம்
  அதிர்தல் - ஒலித்தல்
  ஊமன் - கூகை
  ஓரி - நரி
  ஈம எரி - சுடலைத்தீ
  கமழும் - நாறும்
  ஓவியம் - சித்திரம்
  களிப்பு - மகிழ்ச்சி
  குறையிரந்தனர்-குறையை முறையிட்டனர்
  கலி - வறுமை; முறைகேடு
  துந்துபி - வாத்தியம்
  களைதல் - போக்குதல்
  மங்கலநாண் - தாலி
  உகைத்து - செலுத்தி
  ஐம்படை - வில், வாள், சங்கு, தண்டு, சக்கரம்
  வாரணம் - யானை
  பார்த்திபர் - அரசர்
  செறிந்த - நெருங்கிய
  சென்னி - சிரம்
  அமரர் - தேவர்
  வீரக்கழல் - அவரவர் புரிந்த வீரத்தை எழுதிக் காலிலிட்ட காப்பு
  கலாம் - ஆரவாரம்
  கலாம் - கலகம்
  அபயம் - அடைக்கலம்
  சந்திரவிம்பம் - நிலா
  வாரிதி - கடல்
  பிடிக்குலம் - பெண்யானைக் கூட்டம்
  தவிசு - ஆசனம்
  கலுழன் - பருந்து
  திவலை - துளி
  உவகை - மகிழ்ச்சி
  தகர்க்க - உடைக்க
  தாரகை - நட்சத்திரம்
  பணி - ஆபரணம்
  மந்திரபாரகர் - மந்திராலோ சனையிற் றேர்ந்தவர்
  ஆரம் - முத்துவடம்
  அயம் - குதிரை
  ஏகவடம் - தனிமாலை
  விலையில் - விலைமதிக்க முடியாத
  மகரக்குழை - சுறாமீன் வடிவாகச் செய்த காதணி
  பிரளயம் - கடல்
  வளை - சங்கு
  வயிர் - கொம்பு
  பல்லியம் - வாத்தியங்கள்
  வெற்பு - மலை
  மாருதம் - காற்று
  மூரி - பெரிய
  வேலை - கடல்
  விசும்பு - ஆகாயம்
  வடவை - உகமுடிவிற்றோன்றும் தீ
  இவர்ந்தான் - ஏறினான்
  இரைவேட்ட - இரைவிரும்பிய
  இகல் - பகை
  கொளுவி - மூட்டி
  கற்பனை - உறுதிமொழி
  சனபதி - அரசன்
  தறுகண் - கொடிய
  நெட்டுயிர்த்து - பெருமூச்செறிந்து
  தண்டு - படை
  சாலை - ஓர் நாடு
  தண்டத்தலைவர் - படைத் தலைவர்
  இமையோர் - தேவர்
  வயவர் - வீரர்
  கவரி - சாமரை
  பருகும் - விழுங்கும்
  இகல் - போர்
  குழாம் - கூட்டம்
  தெழித்த - அதட்டிய
  இனம் - கூட்டம்
  சிலைத்த - ஒலித்த
  அடர்த்தல் - நெருங்குதல்
  முளைக்க - எழ
  உரும் - இடி
  வடி - கூரிய
  நதி - ஆறு
  எற்றி - கொண்டு
  வடவை - உகமுடிவில் தோன்றும் நெருப்பு
  சயமாது - வீரமாது
  சரம் - அம்பு
  வகிர் - பிளவு
  மந்திரம் - காவல்
  துஞ்சி - இறந்து
  விருதர் - வெற்றிவீரர்
  வயவர் - வீரர்
  வாகை - வெற்றிமாலை
  மதமலை - யானை
  உற்சாகம் - வீரம்
  அட்டகிரி - எட்டு மலைகள்
  மறலி - இயமன்
  பிலம் - குகை
  கரந்தனர் - மறைந்தனர்
  அருகர் - அருகசமயத்தவர்
  குருதி - இரத்தம்
  கடம் - மதம்
  ஒட்டு - படைவகுப்பு
  கட்டு - பற்று
  கம் - வேகம்
  ஒற்றர் - உளவறிவோர்
  கடிது - விரைந்து
  பன்னசாலை - முனிவர்கள் இருக்கும் வீடு
  அத்தமனகிரி - சூரியன் படுகின்ற மலை
  வெற்பு - மலை
  பறித்து - களைந்து
  அமணர் - சமணர்
  சாக்கையர் - பௌத்தர்
  ஓவியர் - சித்திரகாரர்
  சயத்தம்பம் - வெற்றித் தம்பம்
  சூடினான் - தொழுதான்
  காளகண்டன் - சிவபெருமான்
  அதரம் - இதழ்
  பொய்கை - குளம்
  செஞ் சோற்றுக் கடன் - உண்ட சோற்றுக் காகச் செய்யும் கடமை
  கவசம் - சட்டை
  சாதுரங்கம் - நால்வகைப்படை
  சாதுரங்கம் - பெரிய
  தழை - பெரிய
  கமஞ்சூல் - வயிறு ஊதி
  முன்னம் - மார்பு
  கவிழுகின்ற - குனிகின்ற
  உகிர் - நகம்
  மடு - கோணி
  இக்கட்டு - துன்பம்
  முரசம் - வாத்தியம்
  வாகுவலயம் - தோள்வளை
  ஏகாவலி - ஒற்றைவடமாலை
  கறித்து - கடித்து
  தகர்த்து - உடைத்து
  நாச்சி - தலைவி
  துலை - தராசு
  தூணி - ஓர் அளவு
  கடை - கடைக்கண்பார்வை
  மிதித்தோடிய - பயந்து தப்பிஓடிய
  நாழி - அளக்கும்கொத்து
  பந்தி - நிரை
  நுதி - முனை
  பொறுத்து - துளைத்த
  வழுதி - பாண்டியன்